கரிம கழிவற்ற நிலையை அடைய கூடுதல் முனைப்புக் காட்ட வேண்டும் என்று அரசாங்கம் இணையம் மூலம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில் ஆய்வில் பங்கேற்ற மூவரில் இருவர் கரிம கழிவற்ற நிலையை அடைய 2050ஆம் ஆண்டு இலக்கு வைத்துள்ளது, இந்தப் பிரச்சினையில் போதுமான ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக இல்லை என்று கூறியுள்ளனர்.
தேசிய பருவநிலை மாற்ற செயலகம் இணையம் வழி மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளன.
அரசாங்கத்தின் 'ரீச்' எனப்படும் கருத்து சேகரிப்புப் பிரிவு செப்டம்பர் 5ஆம் தேதியிலிருந்து 26ஆம் தேதிவரை இந்த ஆய்வை மேற்கொண்டது. இது அரசாங்கம் இந்த வாரம் தனது ஆகக் கடைசி பருவநிலை இலக்குகளை அறிவிக்கும் முன்னர் நடத்தப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம், சிங்கப்பூர் கரிம கழிவற்ற நிலையை 2050ஆம் ஆண்டுக்குள் அடைய இலக்கு கொண்டுள்ளதாக செவ்வாய்க் கிழமை அறிவித்தது. இந்நிலையில், கரிம வாயு வெளியேற்றக் கொள்கையை அது கடுமைாயாக்கியுள்ளது என்றும் அதன்படி, 2030ஆம் ஆண்டுக்குள் கரிம கழிவு 60 மில்லியன் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் 2030ஆம் ஆண்டுக்குள் கரிம கழிவு 65 மில்லியன் டன் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஐக்கிய நாடுகள் சபை பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் கீழ் சிங்கப்பூர் தேசிய அளவில் தனது பங்கை செலுத்துவதற்காக இந்த இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட இலக்குகளின் மூலம் சிங்கப்பூர் கரிம கழிவற்ற நிலையை சீக்கிரமே அடைய தாங்கள் சிலவற்றை விட்டுக்கொடுப்பதுடன் சில அசௌகரியங்களையும் ஏற்கத் தயாராக இருப்பதாக ஆய்வில் பங்கேற்ற 94 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். ஆய்வில் பொதுமக்கள், வர்த்தக மற்றும் அரசு சாரா அமைப்புகளிடமிருந்து 490 கருத்துகள் சேகரிக்கப்பட்டதாக கூறப் படுகிறது.
இதில் பெரும்பாலானோர், அதாவது 65 விழுக்காட்டினர், 20லிருந்து 39 வயதுக்கு உட்பட்டவர்கள்.

