செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
617e29e7-f4aa-4a59-b10a-d486f6eb460b
-

ஈஸ்வரன்: நிறுவனத் தலைமைத்துவம்

சுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை தரவேண்டும்

சிறிய, நடுத்தர நிறுவனங்களின் தலைமைத்துவம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை முக்கிய முன்னுரிமை என்றும் அது தங்கள் வர்த்தகத்துக்குத் தேவை என்பதையும் அங்கீகரிக்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான எஸ். ஈஸ்வரன் கூறியுள்ளார். ரிசோர்ட்ஸ் வோர்ல்டு மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் புத்தாக்க, தொழில்நுட்ப வாரக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் நேற்று முன்தினம் பேசினார். சுற்றுப்புற நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பது நிறுவனங்களின் தலைமையிலிருந்து தொடங்க வேண்டும் என்றார் திரு ஈஸ்வரன்.

மகளுக்காக பழி ஏற்றதன் தொடர்பில் தந்தைமீது குற்றச்சாட்டு

சாலை விபத்தின் தொடர்பில் தமது மகளுக்காகப் பழியை ஏற்றுக்கொண்டு, முன்னதாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஆடவர்மீது, சட்டம் தன் கடமையை ஆற்ற இடையூறு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

டேவிட் ஓங், 56, மீது நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மேலும், வாகனமோட்டும் உரிமம் இன்றி தமது மகள் ஆட்ரி ஓங் ஹுய் லிங்கை வாகனமோட்ட அனுமதித்ததும் அவற்றில் ஒன்று. 26 வயது ஆட்ரி மீதும் அதேபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அத்துடன், 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி இரவு 10 அளவில் அலட்சியமாக வாகனம் ஓட்டி, மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கு கடுமையான காயம் ஏற்படுத்தியதாகவும் ஆட்ரி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

மூன்றாண்டுகளாக மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர்

சிங்கப்பூரின் மத்திய வட்டாரத்தில் உள்ள பள்ளி, கேளிக்கை தங்குவிடுதி உள்ளிட்ட பல இடங்களில், மூன்று ஆண்டுகளாக 13 சிறுவர்களை பாலியல் தொந்தரவு செய்ததை முன்னாள் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்த ஆடவர், இணைப்பாட நடவடிக்கை ஆசிரியராக இருந்தபோது சிறுவர்களின் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டதுடன் அவர்களுக்கு முத்தம் கொடுத்தார்.

2015க்கும் 2018க்கும் இடையே குற்றச்செயல்கள் நடந்தன. அப்போது சிறுவர்களுக்கு 13 வயது முதல் 15 வயது. அந்த 39 வயது நபர், தொந்தரவு, இளையவருக்கு எதிராக அநாகரீகமான செயலைப் புரிதல் உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகளை நேற்று ஒப்புக்கொண்டார்.

மேலும் 23 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன. சிறுவர்களைப் பாதுகாக்க, சந்தேக நபர், பாதிக்கப்பட்ட சிறுவர்கள், பள்ளி போன்ற விவரங்களை வெளியிட முடியாது. குற்றம் சாட்டப்பட்ட ஆடவர், 2018 நவம்பரில் ஆசிரியர் பணியை விட்டு விலகியதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நவம்பர் 29 அன்று வழக்கிற்கு முந்திய கலந்துரையாடல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனநலக் கழகத்தில் மனநலப் பரிசோதனைக்குச் செல்லும்படி மாவட்ட நீதிபதி பிரேம் ராஜ் ஆடவருக்கு உத்தரவிட்டார்.

பணி உரிமம் ரத்தான வழக்கறிஞர்மீது நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு

வழக்கறிஞர் பணி உரிமம் ரத்துசெய்யப்பட்ட ஒருவர்மீது, வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டு நம்பிக்கை மோசடி செய்ததாக நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

56 வயது சொராயா ஹாஃப்சா இப்ராஹிமின் வழக்கறிஞர் பணி உரிமம் 2020 ஜனவரியில் ரத்து செய்யப்பட்டது. குற்றஞ்செய்ததாகக் கூறப்பட்ட காலகட்டத்தில் அவர் சொராயா எச் இப்ராஹிம் நிறுவனத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

அவரிடம் ஆடவர் ஒருவர், ரொக்கப் பணத்தை ஒப்படைத்ததாகக் கூறப்பட்டது. ஆனால் மொத்தத் தொகை என்ன, ஏன் அவர் அப்பணத்தை சொராயாவிடம் தந்தார் என்பது போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

சொராயா 2019ல் வெவ்வேறு தருணங்களில் $500,000க்கும் மேற்பட்ட தொகையைக் கையாண்டதாகக் கூறப்படுகிறது. அவருக்கு $100,000 பிணை வழங்கப்பட்டு, வழக்கு இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.