சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறிய 37 வயது நபருக்கு, மிரட்டும் வகையில் பேசியதற்காக கடுமையான எச்சரிக்கை விடுக்கப்படும்.
அமெரிக்கரான லா ஏண்டி ஹியன் டக் மீது மேற்கொள்ளப்பட்ட மனநலப் பரிசோதனையை ஆராய்ந்த பிறகு, அரசாங்கத் தரப்பு அவருக்கு கடும் எச்சரிக்கையை விடுக்கத் திட்டமிடுகிறது. அரசுத்தரப்புத் துணை வழக்கறிஞர் லிம் யிங் மின் நேற்று இதைத் தெரிவித்தார். ஹியன் டக்கால் பொதுமக்களுக்கு ஆபத்து இருப்பதாக மன நலக் கழகத்தின் மனநல மருத்துவர் மதிப்பிட்டுள்ளதாகவும் திருவாட்டி லிம் எழுத்துபூர்வமாகக் கூறினார்.
ஹியன் டக்கின் வழக்கறிஞரும் யூஜின் துரைசிங்கம் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்தவருமான திரு ஜோஹனஸ் ஹாடி, ஹியன் டக்கிற்கு மனப் பிறழ்வு நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.
சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து சிங்கப்பூருக்கு எஸ்ஐஏவின் எஸ்கியூ 33 விமானத்தில் பயணித்த ஹியன் டக், அப்போது ஒருவரை அறைந்த குற்றச்சாட்டை அவர் நவம்பர் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்வார் என்று தெரிகிறது. செப்டம்பர் 26ஆம் தேதி இரவு 10.26 மணிக்கு சான் ஃபிரான்சிஸ்கோவிலிருந்து எஸ்கியூ33 விமானம் புறப்பட்டது. விமானம், செப்டம்பர் 28ஆம் தேதி காலை 5 மணி அளவில் சிங்கப்பூர் வந்திறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
விமானம் சிங்கப்பூர் வந்தடைய ஏறக்குறைய 6 மணி நேரம் இருந்தபோது, ஒரு கைப்பையில் வெடிகுண்டு இருந்ததாக ஹியன் டக் கூறினார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிறகு, வேறொரு பயணியின் பையைப் பறிக்க முயன்றார் ஹியன் டக். தம்மைத் தடுக்க வந்த விமான பணியாளரை அவர் அறைந்ததாகக் கூறப்படுகிறது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து காவல் துறைக்கு எச்சரிக்கப்பட்டவுடன், சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் போர் விமானங்கள் எஸ்கியூ 33 விமானத்தைச் சூழ்ந்து கொண்டன.
அவற்றின் உதவியுடன் விமானம் சாங்கி விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது. வெடிகுண்டு இருந்தது என்ற தகவல் போலியானது என்பதைக் காவல் துறையினர் உறுதிப்படுத்தினர்.