மலேசிய மாமன்னர் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தஃபா பில்லா ஷாவை நேற்று நியூவாட்டர் வருகையாளார் நிலையத்தில் வரவேற்றார் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ.
மூன்று நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் வந்த மாமன்னருக்கு நியூவாட்டர் வருகையாளார் நிலையத்தின் செயல்பாடு பற்றி விளக்கமளிக்கப்பட்டது.
தமது வரவேற்புரையில் திருவாட்டி ஃபூ, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் குடிநீர் ஒத்துழைப்பு பற்றி எடுத்துரைத்தார்.
"இருநாடுகளின் நீர்வள நிலையங்களிலும் குடிநீர்வள அமைப்பு களிலும் உள்ள அதிகாரிகள் பல்லாண்டுகளாக ஒருவருடன் ஒருவர் சிறந்த முறையில் ஒத்துழைத்து வருகின்றனர். அவர்களின் ஒத்துழைப்பால் இருநாடுகளும் குடிநீர் தொடர்பான தங்கள் சவால்களைச் சமாளிக்க முடிந்துள்ளது," என்றார் அமைச்சர்.
சிங்கப்பூர் கொண்டிருக்கும் நான்கு பிரதான குடிநீர்வளங்களில் ஒன்று மலேசியாவிலிருந்து நீரை இறக்குமதி செய்வது. நீர்த்தேக்கங்கள், கடல்நீரைக் குடிநீராக்குவது, நியூவாட்டர் ஆகியவை மற்ற மூன்று நீர்வளங்கள்.
"உலகில் குடிநீர் தொடர்பான சவால்களை எதிர்நோக்கும் நாடுகளான சிங்கப்பூரும் மலேசியாவும் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும், அதற்கு தொழில்நுட்பத்தையும் புத்தாக்கத்தையும் நாம் கருவிகளாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்," என்று திருவாட்டி ஃபூ கூறினார்.
கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் சிங்கப்பூரும் மலேசியாவும் அணுக்கமாகப் பணியாற்றியதால், அத்தியாவாசிய பொருள்கள் எல்லைகளைக் கடந்து வரமுடிந்தது என்பதை அமைச்சர் சுட்டினார்.
"நீர்ப் பாதுகாப்பு என்பது இருநாடுகளுக்கும் பொதுவானவை. நீர்ப் பாதுகாப்பு, கடலோர மற்றும் வெள்ள பாதுகாப்பு போன்ற அம்சங்களில் சிங்கப்பூர், மலேசியாவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளது," என்றார் அவர்.
மலேசிய மாமன்னர் பின்னர், நியூவாட்டர் வருகையாளார் நிலையத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நுண்வடி கட்டி முறையின் மூலம் நியூவாட்டர் குடிநீர் உருவாக்கப்படும் விதம் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கிடையே மலேசிய மாமன்னர் நேற்று பிற்பகல் சிங்கப்பூர் ஆயுதப்படையின் பாசிர் ரிஸ் முகாமுக்குச் சென்றார். அங்கு அவரை தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் வரவேற்றார்.
அங்கு சிங்கப்பூர் ஆயுதப்படையின் மின்னற்படையின் சிறப்பு நடவடிக்கை பணிக்குழுவின் செயலாக்கம் பற்றி விளக்கப்பட்டது. மேலும் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் CH-47F ஹெலிகாப்டரிலும் அவர் பயணம் செய்தார்.

