விக்டோரியா இசை அரங்கத்தில் 67 மில்லியன் ஆண்டு பழமையான டி-ரெக்ஸ் வகை டைனசாரின் எலும்புக்கூட்டைக் காண பலர் நேற்று திரண்டனர்.
டைனசார் எலும்புக்கூடு கண்காட்சி நேற்று பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.
காட்சிக்கு வைக்கப்பட்ட டைனசாரின் எலும்புக்கூட்டின் நீளம் 12.2 மீட்டராகும். அது அமெரிக்காவில் உள்ள மொன்டானா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
விக்டோரியா அரங்கில் நேற்று முதல் நாளை வரை காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை அது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
அடுத்த மாதம் 30ஆம் தேதியன்று அந்த டைனசார் எலும்புக்கூடு ஹாங்காங்கில் ஏலக்குத்தகை மூலம் விற்கப்படும்.
அந்த டைனசார் எலும்புக்கூட்டுக்கு ஷென் என்று பெயரிடப்பட்டுள்ளது.
சீனமொழியில் ஷென் என்றால் தெய்வீகமானது என்று பொருள்.
ஆசியாவில் ஏலக்குத்தகை மூலம் டி-ரெக்ஸ் எலும்புக்கூடு விற்கப்படுவது இதுவே முதல்முறை.
அதன் மதிப்பு 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் ($21 மில்லியன்) 25 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் இடைப்பட்டது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று காலை கண்காட்சி திறப்பதற்கு முன்பே விக்டோரியா இசை அரங்கத்துக்கு வெளியே பலர் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருந்தனர்.
நேற்று பிற்பகல் 1 மணி அளவில் கிட்டத்தட்ட 50 பேர் கண்காட்சியைக் கண்டு ரசித்தனர்.
குடும்பங்கள், பதின்மவயதினர், மூத்தோர், சுற்றுப்பயணிகள் ஆகியோர் டைனசார் எலும்புக்கூட்டைக் கண்டு வியந்தனர்.

