வங்கித் தொழில், கப்பல் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களையும் நடத்த அல்லது இணையத்தில் நண்பர்களுடன் பாதுகாப்பான முறையில் கலந்துரையாட உகந்த தங்கத்தரம் வாய்ந்த மையமாக சிங்கப்பூரை ஆக்குவதற்கான தனது இயக்கத்தைத் தொழில்நுட்பச் சமூகம் தீவிரப்படுத்தி இருக்கிறது.
இதன் தொடர்பில் நேற்று 'மெய்நிகர் மின்னிலக்க நன்னம்பிக்கை உன்னத மையம்' என்ற ஒரு செயல்திட்டம் அறிவிக்கப்பட்டது.
ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாட்டு (ஏபெக்) அமைப்பில் அங்கம் வகிக்கும் 21 நாடுகளுக்கு இடையில் ஆய்வுகளை முன்னெடுப்பது, தலைசிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது ஆகிய இரண்டு அம்சங்களில் அந்தச் செயல்திட்டம் ஒருமித்த கவனம் செலுத்தும்.
மின்னிலக்க நன்னம்பிக்கை கருத்தரங்கில் தொடர்பு, தகவல் மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் இது பற்றி அறிவித்தார்.
அந்தச் செயல்திட்டத்தை ஏபெக் மற்றும் ஆசிய-பசிபிக் பெருங்கடல் பகுதியை உள்ளடக்கிய அமைப்புகளுடன் சேர்ந்து 'எஸ்ஜிடெக்' எனும் தொழில்நுட்பத் தொழில் சங்கம் நிர்வகித்து நடத்தும்.
மின்னிலக்க நன்னம்பிக்கை தொழில்துறை வரும் 2027வது ஆண்டு வாக்கில் சிங்கப்பூரில் $4.8 பில்லியன் சந்தை மதிப்பைக் கொண்டதாக இருக்கும். ஏறக்குறைய 45,000 வேலைகளை உருவாக்கும் என்று எஸ்ஜிடெக் அமைப்பு கணிக்கிறது.
சிங்கப்பூர் புத்தாக்க தொழில்நுட்ப வார மாநாட்டு நிகழ்ச்சியின் கடைசி நாளான நேற்று மின்னிலக்க நன்னம்பிக்கை கருத்தரங்கு நடந்தது.
அந்த நான்கு நாள் மாநாட்டில் புதிய நிறுவனங்கள், சிறிய நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், நிறுவனங்கள், அரசாங்க, ஆய்வு அமைப்புகள் கலந்துகொண்டன.
இதனிடையே, நேற்றைய இந்தக் கருத்தரங்கில் நடந்த ரிசோர்ட்ஸ் வோல்டு மாநாட்டு நிலையத்திலேயே சிறிய, நடுத்தர நிறுவன தொழில்நுட்ப தினம் அனுசரிக்கப்பட்டது.
வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சரும் மனிதவள அமைச்சருமான டான் சீ லெங், இந்த தொழில்நுட்பத் தினத்தில் மெய்நிகர் ரீதியில் உரையாற்றினார்.
ஏ*ஸ்டார் எனப்படும் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுக் கழகம், தன்னுடைய ஆய்வாளர்களில் ஐந்து பேரை, ஐந்து தொழிற்சங்கங்களுக்கு ஒரு முன்னோடித் திட்டத்தின்கீழ் அடுத்த ஆண்டில் அனுப்பி வைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
அந்த அறிவியல் வல்லுநர்கள், தொழில்நுட்ப ரீதியில் அந்தச் சங்கங்களுக்கு உதவுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

