900 மோசடிகள் தொடர்பில்
310 பேரிடம் விசாரணை
ஏறக்குறைய 900 மோசடி சம்பவங்களில் தொடர்பு உடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மொத்தம் 310 பேர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
அந்த மோசடிகளில் $5.8 மில்லியனுக்கும் அதிக தொகையை மக்கள் இழந்து இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இணைய வர்த்தகம், முதலீடுகள், வேலை, தொழில்நுட்பம் ஆகியவை தொடர்பான மோசடிகள், அரசாங்க, சீன நாட்டு அதிகாரிகள் போன்று நடித்து ஏமாற்றியது, போலி மின்னஞ்சல் மோசடிகள் ஆகியவை அந்த சட்டவிரோத செயல்களில் உள்ளடங்கும் என்று காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
வர்த்தக விவகாரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ஏழு காவல்துறை தரைப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் சேர்ந்து அக்டோபர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 27ஆம் தேதி வரை எடுத்த நடவடிக்கைகளில் அவர்கள் சிக்கினர்.
அதிகாரிகள் புலன்விசாரணை நடத்தி வருகிறார்கள். அவற்றில் 208 ஆடவர்களும் 102 மாதர்களும் உதவி வருகிறார்கள். அந்தச் சந்தேகப் பேர்வழிகளுக்கு வயது 16 முதல் 85 வரை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தடை விதிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு சிறை, அபராதம்
தொழில் நடத்த தடை விதிக்கப்பட்டு இருந்த சேமுவல் சியோவ் என்ற வழக்கறிஞர் தனது முந்திய சட்ட அலுவலகத்தில் தனக்குக்கீழ் வேலை பார்த்த ஒருவரின் நெற்றியில் விரலால் குத்தித் தள்ளினார். பெண் வழக்கறிஞர் ஒருவரைத் தாக்கினார்.
அவருக்கு நேற்று நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. $1,500 அபராதம் விதிக்கப்பட்டது. தனது உறவினரான பிராண்டா கோங் ஷின் யிங், 26, என்ற வழக்கறிஞரைத் தாக்கியதாக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
ரிச்செல் காங் பெய் ஷென், 21, என்பவரிடம் பலவந்தமாக நடந்துகொண்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். சியோவ் 2022ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி வழக்கறிஞர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.
குடித்துவிட்டு டாக்சி ஓட்டுநரை தாக்கியவருக்குத் தண்டனை
ஸூக் இரவுநேர கேளிக்கை விடுதியில் மதுபானம் அருந்திய ஆடவரும் அவரின் நண்பரும், பெர்னார்ட் சான், 44, என்ற டாக்சி ஓட்டுநரைத் தாக்கினர். இந்தச் சம்பவம் 2020ஆம் ஆண்டு புத்தாண்டு நாளில் நிகழ்ந்தது. தாக்கப்பட்ட டாக்சி ஓட்டுநர் தனது வாகனத்தை ரிவர் வேலி ரோட்டில் நிறுத்தி வைத்து இருந்தார்.
திரு சானுக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட கோ லியாங் சாய், 30, என்பவருக்கு நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டு இருந்த முகம்மது தாலெப் கிஷன், 31, என்பவருக்கு டாக்சி ஓட்டுநரைத் தாக்கியதற்காகவும் இதர குற்றச் செயல்களுக்காகவும் இந்த மாதம் 10ஆம் தேதி 17 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நடந்தபோது குற்றவாளி கோவுக்கு நான்கு வார சிறைத் தண்டனை விதிக்கும்படி அரசாங்க வழக்கறிஞர் கீத் திருமாறன் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். டாக்சி ஓட்டுநர்கள் தங்கள் சேவையை ஆற்றும்போது எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஆபத்துகள் அதிகம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

