கணினிச்சில்லு தொழில்துறையில் வாழ்க்கைத்தொழிலை அமைத்துக் கொள்ள விரும்பும் தொழில்நுட்பக் கல்விக்கழக (ஐடிஇ) மாணவர்களுக்கு மேலும் உதவி கிடைக்கவிருக்கிறது.
சீரமைக்கப்பட்ட பயிற்சி நிலையத்தில் நேரடி பயிற்சி வடிவிலும் வேலையில் சேர்வதற்கும் அவர்கள் உதவிபெற இருக்கிறார்கள்.
அங் மோ கியோவில் செயல்படும் ஐடிஇ மத்திய கல்லூரி வளாகத்தில் 700 சதுர மீட்டர் பரப்பளவில் நுண்மின்னணு பயிற்சி நிலையம் சீரமைக்கப்பட்டு இருக்கிறது.
அந்த நிலையம், விவேகமிக்க உற்பத்தித் துறை தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. கணினிச் செயல்பாடு, கணினித் தகவல் பகுப்பாய்வு, இயந்திர மனிதத் தொழில்நுட்பம் முதலானவை அவற்றில் அடங்கும்.
உற்பத்தித் துறை பணிகளிலும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் பராமரிப்பு தேர்ச்சிகளைப் பெறுவதிலும் தொழில்நுட்பச் சாதனங்களை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி அந்த நிலையம் ஐடிஇ மாணவர்களுக்குப் போதிக்கும்.
மின்னணு தொடர்புடைய பயிற்சி படிப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் இதன் மூலம் பலனடையலாம்.
சீரமைக்கப்பட்ட பயிற்சி நிலையம் நேற்று தொடங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஐடிஇ மாணவர்கள் வாழ்க்கைத்தொழில் சந்தை ஒன்றில் கலந்துகொண்டார்கள்.
பிரதமர் அலுவலக துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். உற்பத்தித் துறையின் மூலாதார துறையாக மின்னணுத் துறை திகழ்கிறது என்று திரு டான் கூறினார்.
உற்பத்தித் துறையில் வேலை பார்க்கும் மொத்த ஊழியர்களில் 68,000க்கும் மேற்பட்டவர்கள் அல்லது ஏறத்தாழ 17 விழுக்காட்டினர் மின்னணுத் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர் சுட்டினார்.

