சிங்கப்பூரில் பொது மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் பல ஆண்டுகளாகவே கூட்டம் அதிகமாக இருந்து வருவதாகத் தெரிகிறது.
தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம், தேசிய பல்கலைக்கழக சுகாதாரத்துறை, சிங்ஹெல்த் ஆகிய மூன்று சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களும் அண்மையில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து கடந்த பத்து மாத காலமாகவே தங்கள் மருத்துவமனை களின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் கூட்டம் மிக அதிகமாக இருந்து வருவதாக அந்தக் கூட்டறிக்கை தெரிவித்தது. இப்போது கொவிட்-19 தொற்று அதிகமாகி இருக்கிறது. இதனால் நிலைமை இன்னும் கடினமாகி உள்ளது. சூழ்நிலையை மிக அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.
கொவிட்-19 நோயாளிகளையும் இதர நோயாளி களையும் கையாள சூழ்நிலைக்கு ஏற்ப அவை தங்களைச் சரிசெய்துகொண்டு வருகின்றன.
கொரோனா தொற்று அறிகுறிகள் தெரியவந்துள்ள நிலையில் பரிசோதனை முடிவுகளுக்காக சிலர் காத்து இருக்கக்கூடும். அவர்களை மனத்தில் கொண்டு படுக்கைகளை மருத்துவமனைகள் ஒதுக்கி தயாராக வைத்து இருக்கின்றன. இதர வசதிகளையும் அவை ஆயத்தப்படுத்தி உள்ளன.
கிருமி தொற்றியும் உடல்நிலை சீராக இருக்கும் நோயாளிகள், வீட்டில் இருந்தபடியே குணமடையும் செயல்திட்டத்தின்கீழ் வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்குத் தொலைவில் இருந்தபடி ஆலோசனைகள், இதர உதவிகள், ஆதரவு அளிக்கப்படுகிறது.
அல்லது கொவிட்-19 சிகிச்சை நிலையம் போன்ற பொருத்தமான நிலையங்களுக்கு அத்தகைய நோயாளிகள் அனுப்பப்படுகிறார்கள்.
உடனே செய்யவேண்டிய அவசரம் அவசியம் அல்லாத அறுவை சிகிக்சைகள் ஒத்திவைக்கப்பட்டு, அத்தகைய நிலையை எதிர்நோக்குவோருக்குத் தொலைவில் இருந்தபடி ஆலோசனை வழங்குவது, அவர்களைக் கண்காணிப்பது, மருந்துகளை அனுப்பி வைத்து உதவுவது போன்றவற்றையும் மருத்துவமனைகள் செய்து வருகின்றன.
நோயாளிகளின் தேவைகளை நிறைவேற்றும் அதேவேளையில், பராமரிப்பு ஊழியர்களிள் சுமையையும் மருத்துவமனைகள் கவனத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது. இத்தகைய சூழலை எதிர்நோக்கினாலும் மருத்துவமனைகள் தங்களால் இயன்ற அளவுக்கு வெகு சிறப்பான சேவையை அளித்துவருகின்றன.
சிங்கப்பூரர்கள் சுகாதாரம், மருத்துவமனை சேவை கள் என்று வரும்போது மருத்துவமனைகளில் சூழல் எப்படி இருந்தாலும் எதையுமே விட்டுக்கொடுக்க மாட்டார்கள். உயர்தரத்தையே அவர்கள் விரும்புவார்கள் என்பதையும் எப்போதுமே கவனத்தில் கொண்டு அவை செயல்படுகின்றன.
கொரானா தொற்று அதிகரித்து வருவதால் ஏற்கெனவே அதிக சுமையை எதிர்நோக்கும் மருத்துவமனைகளுக்கு மேலும் நெருக்கடி எற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகள் கூட்டமும் அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் கையாளவேண்டிய நிலையும் இருக்கும் என்பது இயல்புதான்.
ஆனால் தொற்று தொடர்ந்து இருந்துவரும் ஒரு நிலையில் இப்படிப்பட்ட சூழல் தலைகாட்டினால் பிரச்சினை இன்னும் அதிகரிக்கவே செய்யும்.
இத்தகைய ஒரு நிலையைத்தான் பொது மருத்துவ மனைகள் இப்போது எதிர்நோக்கி வருகின்றன.
இந்தப் பிரச்சினை சிரமமான ஒரு நிலையை உருவாக்கும் அளவுக்குப் பெரிதாகி இருக்கிறது.
பல பொது மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை என்பதால் மருத்துவமனைகளுக்கு வரும் மருத்துவ வாகனங்களில் இருந்து நோயாளிகளைக் கீழே இறக்கி அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க இயலவில்லை. நோயாளிகள் அந்த வாகனங்களிலேயே 30 நிமிடம் வரைகூட காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவுகள் பலவற்றில் நோயாளி கள் தேங்கி இருக்கும் சூழலும் உள்ளது. காரணம் அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றலாம் என்றால் அதற்கான அறைகளும் இல்லை.
பொது மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் கூட்டம் என்பது பல ஆண்டுகளாகவே இருந்துவரும் ஒன்றுதான்.
ஆனால் அந்தப் பிரச்சினை இந்த ஆண்டில் மோசமாகி இருக்கிறது. இதற்கு கொரோனா தொற்று கூடி இருப்பதும் ஒரு காரணம் என்று அவசர சிகிச்சை பிரிவுகளைச் சேர்ந்த மருத்துவர்களும் தாதியர்களும் அண்மையில் செய்தித்தாள் பேட்டியில் தெரிவித்து இருந்தார்கள்.
இந்தச் சூழலில் நோயாளிகளைப் பராமரிக்க போதிய வளங்களும் ஊழியர்களும் இருப்பதை மருத்துவமனைகள் உறுதிப்படுத்த வேண்டும். இதை சுகாதார அமைச்சுடன் சேர்ந்து செய்துவருவதாக பொது மருத்துவமனைகள் அறிவித்துள்ளன.
இதில் பொதுமக்களும் மருத்துவமனைகளுக்கு உதவ முடியும். இது இப்போது மிகவும் அவசியமானதாக, தேவையானதாக ஆகி இருக்கிறது.
மருத்துவமனைகளில் செயல்படும் அவசர சிசிச்சைப் பிரிவுகள் என்பவை சுகாதாரப் பராமரிப்பு முறை முழுவதற்குமே மிகவும் உயிர்நாடியானவை என்பதை மக்கள் உணரவேண்டும்.
இந்தப் பிரிவுகளில் நோயாளிகள் குவிந்துவரும் சூழலில், அவசர சிகிச்சை தேவைப்படாதவர்களும் அதிகமாக வருகிறார்கள் என்பதுதான் சிரமமான தாகவும் கவலையாகவும் இருக்கிறது.
உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தாலொழிய மக்கள் அவசர சிகிச்சைப் பிரிவை நாடக்கூடாது. இதை அவர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
சாதாரண சிறுசிறு உடல்நலப் பிரச்சினைகளைத் தலைசிறந்த முறையில் கவனித்து அவற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் அருமையான வளங்கள் தேவைக்கு அதிகமாகவே தனியார் மருந்தகங்களிலும் பலதுறை மருந்தகங்களிலும் இருக்கின்றன என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தேவையில்லாமல் பொது மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மக்கள் செல்வதால் ஏற்படக்கூடிய தேவையற்ற சிரமங்கள் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக கவனித்து அவசர சிகிச்சையைப் போதிய அளவுக்கு உடனே அளிக்க வேண்டிய தேவையுள்ள நோயாளிகள் இருப்பார்கள். அவர்களை மருத்துவர்களும் தாதியர்களும் உரிய நேரத்தில் கவனித்து உரிய சிகிச்சைகளை அளித்தாக வேண்டும்.
தேவையில்லாமல் அத்தகைய பிரிவுகளில் சிகிச்சை பெற பொதுமக்கள் சென்றால் அவற்றின் பொன்னான நேரமும் வளங்களும் வீணாகும். இதைக் கருத்தில்கொண்டு புரிந்துணர்வுவுடன் மக்கள் செயல்பட்டால் பொது மருத்துவமனைகளின் சுமை பேரளவிற்குக் குறையும்.

