உலகப் பக்கவாத தினத்தைக் குறிக்கும் வகையில் நேற்று ஜூரோங் ஏரித்தோட்டப் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கலந்துகொண்டு தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
இசை நிகழ்ச்சி, சமூகப் பெருநடை உள்ளிட்ட பலவும் இடம்பெற்றிருந்த நேற்றைய நிகழ்ச்சிக்கு 'ஸ்ட்ரோக் சப்போர்ட் ஸ்டேஷன்' (எஸ்3) என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
பெருநடை நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் உட்பட 70 பேர் கலந்துகொண்டனர்.
அவர்களில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுக்குப் பராமரிப்புச் சேவை வழங்கியவர்களும் அடங்குவர்.
எஸ்3 அமைப்பை 2015ல் திரு டியோவின் மனைவியான காலஞ் சென்ற டியோ ேபா யிம் தோற்றுவித்தார். அந்த அமைப்பிற்கு துணைப் பிரதமர் திரு ஹெங்கின் துணைவியார் சாங் ஹுவீ நீ தலைவியாக இருக்கிறார்.
துணைப் பிரதமர் திரு ஹெங் 2016 மே மாதம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சுயநினைவை இழந்த நிலைக்கு அவர் போய்விட்டார்.
பக்கவாத பாதிப்பில் இருந்து மீண்டு வந்த தமது அனுபவம் பற்றி நிகழ்ச்சியில் திரு ஹெங் பகிர்ந்துகொண்டார்.
இதனிடையே, சிங்கப்பூரில் பக்கவாத நிலவரம் பற்றி கருத்து கூறிய திருவாட்டி சாங், சிங்கப்பூரில் பக்கவாதம் அதிகரித்து வருவதாகக் தெரிவித்தார். ஆகையால் உடல்நலத்துக்கு உறுதுணையான வாழ்க்கைபாணிகளைக் கடைப்பிடித்து வாழும்படி சிங்கப்பூரர்களை அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

