அங் மோ கியோவில் 1,000 மரக்கன்றுகளை நடவேண்டும் என்ற சமூகத் திட்ட இலக்கு நேற்று நிறைவேறியது.
அங் மோ கியோ அவென்யூ 10ல் இருக்கும் செங் சான் சந்தை, உணவங்காடி நிலையத்திற்கு அருகே கடைசியாக 16 மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன.
அங் மோ கியோ நகர மன்றம் நடத்திய மரம் நடும் நாளையொட்டி பிரதமர் லீ சியன் லூங் உள்ளிட்ட பிரமுகர்கள் மரக்கன்றுகளை அங்கு நட்டனர்.
மழை இலேசாக தூறினாலும் ஏராளமான குடியிருப்பாளர்கள் மரம் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அங் மோ கியோவில் கடந்த ஏழு மாதமாக இடம்பெற்று வந்த மரம் நடும் இயக்கம் இப்போது முடிவடைந்து இருக்கிறது.
சிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நட வேண்டும் என்பது தேசிய இலக்கு. அதற்கு ஆதரவாக அங் மோ கியோவில் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டு இருக்கின்றன.
மரக்கன்றுகளை நட்ட பிறகு பிரதமர், அங்கு ஒரு புளோக்கின் தரைத்தளத்தில் எம்ஆர்டி ரயில் பெட்டி போன்று வரையப்பட்டு இருந்த சுவரோவியத்தைப் பார்வையிட்டார். அந்தச் சுவரோவியம் இடம்பெற்ற சுவரில் பழைய ரயில் பெட்டி இருக்கைகள் பொருத்தப்பட்டு இருந்தன.
நிகழ்ச்சியில் அங் மோ கியோ பள்ளி மாணவர்கள் பல்வேறு சுற்றுச்சூழல் திட்டங்கள் பற்றி குடியிருப்பாளர்களுடன் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

