சிங்கப்பூரின் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஏழு நாள் அடிப்படை
யிலான சராசரி கொவிட் தொற்று எண்ணிக்கை இம்மாதம் 18ஆம் தேதி 8,243ஆக இருந்தது. இந்த எண்னிக்கை அக்டோபர் 28ஆம் தேதி வெகுவாகக் குறைந்து 5,193ஆகப் பதிவானது.
வார அடிப்படையிலான தொற்று எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அக்டோபர் 9ஆம் தேதி இந்த எண்ணிக்கை விகிதம் 1.74ஆக இருந்தது.
எக்ஸ்பிபி துணைத் திரிபால் ஏற்பட்டுள்ள தற்போதைய கொவிட்-19 தொற்று அலை நவம்பர் மாத மத்தியில் உச்சம் தொடும் என சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறிய ஒரு வாரத்தில் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த அலை உச்சம் தொட்டுவிட்டது என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன என்று தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்றுநோய் பிரிவு மூத்த ஆலோசகர் பேராசிரியர் டேல் ஃபிஷர் நேற்று கூறினார்.
நமது மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் உயிர்வாயு தேவைப்படும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கைக் குறைந்து வந்திருப்பதை அவர் சுட்டினார். அக்டோபர் 29 நிலவரப்படி மருத்துவமனைகளின் பொது படுக்கைப் பிரிவில் 468 நோயாளிகள் இருந்தனர் என்றும் இது பத்து நாள்களுக்கு முன்பாகக் கிட்டத்தட்ட 600ஆக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே எக்ஸ்பிபி திரிபு தொடர்பான மேலும் விரிவான ஆய்வுகள் தேவை என்றாலும் அந்த திரிபுவால் ஏற்படும் தொற்று மேலும் வீரியமாக இருக்கும் என்பதற்கு எந்த தரவும் இல்லை என்று உலகச் சுகாதார அமைப்பு அக்டோபர் 27ஆம் தேதி கூறியிருந்தது. எனினும் ஓமிக்ரான் திரிபைவிட எக்ஸ்பிபி திரிபு இன்னும் எளிதில் மீண்டும் தொற்றக் கூடியது என ஆரம்பக்கட்ட ஆதாரங்கள் தெரிவிக்கின்றன என்றும் அது கூறியது. சிங்கப்பூரில் புதிதாகத் தோன்றியுள்ள பிகியூ.1 திரிபு மற்ற ஓமிக்ரான் துணைத் திரிபுகளுடன் ஒப்பிடுகையில் அதிக வேகமான வளர்ச்சியைக் காட்டுகிறது என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்தது. அக்டோபர் 23ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் பிகியூ.1, பிகியூ.1.1 திரிபுகளால் நான்கு பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே காரவோக்கே நிறுவனங்கள் புதிய தொற்று அலையால் தங்கள் சேவைகளுக்கு மீண்டும் தடைகள் விதிக்கப்படலாம் என அஞ்சுகின்றன. கிட்டத்தட்ட ஆறு மாதக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு அண்மையில்தான் கராவோக்கே நிலையங்கள் முழுமையாக தங்கள் சேவைகளை வழங்கத் தொடங்கி இருந்தன.

