சிங்கப்பூர் தூய்மை தினத்தையொட்டி நேற்று ஆர்ச்சர்ட் சாலையைத் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. அதில் ஒரு மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்ட குப்பைப் பைகளில் சிகரெட் துண்டுகள், மெல்லிழைத் தாள்கள், பிளாஸ்டிக் பொட்டலங்கள், முகக் கவசங்கள் போன்ற குப்பைகள் சற்றிக்கப்பட்டன.
மோல்மென் - கேர்ன்ஹில் குடியிருப்பாளர்கள், தேசிய இளையர் மன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் என கிட்டத்தட்ட 400 பேர் நேற்றைய நிகழ்ச்சியில் கூடினர். பொதுச் சுகாதார மன்றத்தின் காலாண்டு எஸ்ஜி கிளீன் டே, அதாவது எஸ்ஜி தூய்மை தினத் திட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இத்திட்டத்தின் ஓர் அங்கமாக எஸ்ஜி தூய்மை தினத்தன்று அனைத்து பொதுப் பூங்காக்கள், தோட்டங்கள், பூங்கா இணைப்புகள், திறந்தவெளிகள், அடுக்குமாடிக் கட்டடங்களின் வெற்றுத்தளம் ஆகிய இடங்களில் காலை ஆறு மணி முதல் நள்ளிரவு வரை துப்புரவாளர்கள் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடமாட்டார்கள். துப்புரவாளர்கள் இல்லாமல் எந்த அளவுக்குக் குப்பைகள் போடப்படுகின்றன என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். பொதுச் சுகாதார மன்றம், ஆர்ச்சர்ட் சாலை வர்த்தகக் கழகத்துடனும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்துடனும் இணைந்து ஆர்ச்சர்ட் சாலையிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் உள்ள முக்கியப் பேரங்காடி உரிமையாளர்களையும் கடைக்காரர்களையும் ஒருங்கிணைத்தது. அவர்கள் நேற்று தங்கள் வளாகத்தின் பொது இடங்களைச் சுத்தப்படுத்தாமல் இந்த திட்டத்திற்கு ஆதரவு வழங்கினர்.
தூய்மை தின நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்ட தொண்டூழியர்களில் 31 வயது இந்திய நாட்டு ஊழியர் திரு புருஷோத்தமனும் ஒருவர். சிங்கப்பூரர்களுடன் தாமும் தமது நண்பர்களும் ஒரு நல்ல காரியத்திற்காக இணைந்து செயலாற்றுவதற்கு இந்நிகழ்ச்சி வழிவகுத்தது என்றார் அவர்.
கலாசார, சமூக, இளையர் துறை மற்றும் வர்த்தக தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நாட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்வதில் சிங்கப்பூரர்கள் ஒட்டுமொத்த பொறுப்பை ஏற்பதில் அவர்களை ஒன்றுதிரட்ட இதுபோன்ற திட்டங்கள் உதவுகின்றன என்று அமைச்சர் கூறினார்.

