அனுஷா செல்வமணி
மீள்திறன், தலைமைத்துவம், ஒற்றுமை ஆகிய பண்புகளை வெளிநாட்டுப் பயணங்களின்வழி மாணவர்கள் வளர்த்துக்கொள்ள தேசிய இளையர் மன்றம் வாய்ப்பளித்து வருகிறது.
வெளிநாட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆசியான் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் இளையர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அடுத்த ஆண்டு 45 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2018ல் தொடங்கப்பட்ட 'ஆசியான் யூத் ஃபெலோஷிப்' திட்டம், ஆசியானின் இளம் தலைவர்கள் மேலும் வளர்ச்சி அடையவும் அவர்களுக்கிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்தவும் ஒரு தனிச்சிறப்புமிக்க தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டமாக விளங்குகிறது.
தேசிய இளையர் மன்றத்துடன் சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனம் இணைந்து இத்திட்டத்தை ஏற்பாடு செய்து வருகிறது.
உள்ளூர் இளையர்கள் வட்டார நண்பர்களுடன் உறவை வளர்த்துக்கொள்ளவும் இருதரப்பு மற்றும் பலதரப்பு இளையர் பரிமாற்றத் திட்டங்களில் இணைந்துகொள்ளவும் அடுத்த ஆண்டு 7,000க்கும் மேற்பட்ட வட்டார வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று கூறப்படுகிறது.
ஒரு வாரத் திட்டத்தில் வட்டார நாடுகளைச் சேர்ந்த இளம் ஆசியான் தலைவர்களை இணைக்கும் பலதரப்பட்ட நடவடிக்கைகள் நடைபெறும். மூத்த கொள்கை வகுப்பாளர்கள், முக்கியத் தலைவர்கள் போன்றோருடன் திட்டத்தில் பங்கேற்போர் கலந்துரையாட வாய்ப்புகள் வழங்கப்படும்.
அத்துடன், சிங்கப்பூரிலும் வட்டார நாடுகளிலும் அமைந்துள்ள முக்கியமான வசதிகளுக்கும் அமைப்புகளுக்கும் அவர்கள் கற்றல் பயணங்களை மேற்கொள்வர். இவ்வாண்டு இறுதிக்குள் 800க்கும் மேற்பட்ட இளையர்கள் ஆசியான் நாடுகளுக்குச் சென்று சமூக அல்லது துறை சார்ந்த திட்டங்களில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை 'ஒன் ஃபேரர்' ஹோட்டலில் இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் ஆல்வின் டான் கலந்துகொண்டார்.
"மாறிவரும் இந்த உலகச் சூழலில், நம் சிங்கப்பூர் இளையர்கள் வெளிநாட்டு இளையர்களுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வது இன்றியமையாதது. ஆசியான் நாடுகளில் நிலவும் பிரச்சினைகளை அறிந்து, அவற்றுக்கு இளையர்கள் தீர்வுகாண்பதற்கு இதுபோன்ற திட்டங்கள் தளமாக விளங்குகின்றன," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தேசிய இளையர் மன்றத்தில் உறுப்பினராக உள்ள துர்கா ராஜேந்திரன், 30, "உணவுப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், வாழ்க்கைச் செலவு, மனநலம் போன்றவை தொடர்பான சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என ஆசியானைச் சேர்ந்த இளம் தலைவர்கள் ஒன்றாகக் கலந்துரையாட இந்தத் திட்டம் வாய்ப்பளிக்கிறது," என்று சொன்னார்.
உயர்கல்வி பயிலும் இளையர்கள் சிங்கப்பூர், ஆசியான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளுடன் கொண்டுள்ள உறவைப் பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்வதுடன் அவர்கள் அந்நாடுகளின் கலாசாரம் மற்றும் தொழில்கள் பற்றி 'ஏஷியா-ரெடி எக்ஸ்போஷர் புரோ கிராம்' மூலம் அறிந்துகொள்வார்கள்.
இதற்கிடையே, சிங்கப்பூர் இளையர் மன்றம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்துடன் மூவாண்டு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
சிங்கப்பூர் இளையர்கள், ஆசியான் நாடுகளைச் சேர்ந்த இளையர்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்வதோடு, அவர்களுடன் இணைந்து தொண்டூழியப் பணியில் ஈடுபட சிங்கப்பூர் இளையர் படையின் இளையர் பயணத் திட்டத்தில் கலந்துகொள்ளலாம்.
sanush@sph.com.sg

