ரவி சிங்காரம்
இளையர்களுக்கு மட்டுமின்றி எல்லா வயதினருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த திரு கணேஷ் பூமிநாதனை நான் இன்று நினைவு கூர விரும்புகிறேன். நம்மிடையே அவர் இன்று இல்லையென்றாலும் அவரது வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல.
கணேஷ், 11 வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக கதிரியக்க சிகிச்சைக்குச் சென்றார். தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவர், 2018ல் மீண்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தமது 29வது வயதில் கடந்தாண்டு நவம்பர் 3ஆம் தேதியன்று இறைவனடி சேர்ந்தார்.
முதல் சிங்கப்பூரரை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் கணேஷ் ஏறத்தாழ ஆறு ஆண்டு களாக முக்கியப் பங்காற்றியிருந்தார். சிறுவயதிலிருந்தே விமானியாக வேண்டும் என்ற லட்சியம் இருந்தபோதும் புற்றுநோய் காரணமாக விமானி ஆவதற்கான மருத்துவத் தேர்வுகளை அவரால் கடக்க முடியவில்லை. அதனால், ஆளில்லா வானூர்திகளை (டிரோன்) உருவாக்குவதில் தம் கவனத்தைச் செலுத்தினார்.
நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் விண்வெளிப் பொறியியல் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற கணேஷ், 17 வயதில் 'ஏரோடைனமிக் லெபாரடரிஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். ஆளில்லா வானூர்திகளை உருவாக்கியதுடன் 100க்கும் மேற்பட்ட பயிலரங்குகளின்வழி 2,000க்கும் அதிகமான மாணவர்களுக்கு டிரோன் பற்றி கற்பித்தார்.
அத்துடன் சிங்கப்பூர் இளையர் விமானிகள் சங்கத்தில் டிரோன் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றினார். 2015ல் பலூன் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியதற்காக வெண்கலப் பதக்கம் வென்றார். தேசிய சேவையின்போது தங்கப் பதக்கம் பெற்ற பெருமையும் இவரைச் சாரும்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கணேஷ் பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொண்டு வந்த இறுதியாண்டில் புற்றுநோய் மீண்டும் தலைகாட்டியது. நான்கு அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகும் விடாமுயற்சியுடன் ஓராண்டுக்கான பாடங்களை அரையாண்டிலேயே முடித்தார். எட்டு மணி நேரச் சிகிச்சை முடிந்த ஒரு வாரத்தில் உணவைத் தன் மூக்கின் வழியாக உட்கொள்ள வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.
அந்நிலையிலும் தையல்களுடனும் தலையில் வீக்கத்துடனும் தலைவலியுடனும் குடும்பத்தாரின் ஆசையை நிறைவேற்ற மேடையேறித் தன் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். புற்றுநோயிலிருந்து பிழைத்து வருவோராலும் பிறரைப் போன்று துடிப்புமிக்க வாழ்க்கையை வாழ முடியும் என்பதை வெளிப்படுத்த மூவகை விளையாட்டுப் போட்டி, நெடுந்தூர ஓட்டப்பந்தயம், முக்குளித்தல் போன்றவற்றில் பலமுறை ஈடுபட்டார்.
டிரோன் பற்றி எனக்கு முதன்முதலில் பாடம் புகட்டியவரும் கணேஷ்தான். அன்று கணேஷ் கொடுத்த அந்தத் தொடக்கத்தினால்தான் இன்று ரோபோடிக்ஸ் எனும் இயந்திர மனிதவியல் பொறியாளராக இருக்கிறேன்.
மகன் கணேஷைப் பற்றி அவரின் தாயார் கூறுகையில், "மற்ற தாய்மார்கள் பல காலம் காத்திருந்தும் அடையாத இன்பத்தையும் பெருமையையும் அவர் உயிர்வாழ்ந்த அந்த 29 ஆண்டுகளில் எனக்குக் கொடுத்துவிட்டார். எங்களுக்குக் கிடைத்த வரம் கணேஷ்," என்றார்.
எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் துணிச்சல், விடாமுயற்சி, வலிமை ஆகிய பண்பு களை கணேஷின் உருவத்தில் கண்டேன். மரணத்திற்கு அஞ்சாமல் 29 ஆண்டுகளிலேயே வாழ்நாள் சாதனைகளைப் புரிந்த கணேஷை நாம் நினைவுகூர்ந்து இனிவரும் துன்பங்களிலிருந்து மீண்டெழ முயல்வோம்.
நேற்று வெளியிடப்பட்ட
'Explorers Today / Winners Tomorrow:
Are you Ready for the Future Economy?' நூலில் கணேஷின் வாழ்க்கைப் பயணம் உட்பட பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த வெவ்வேறு வயதினரின் வாழ்க்கைத்தொழில் பயணங்களைக் கூறும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
இந்நூலை வாங்க விரும்புவோர்
hello@asiainstituteofmentoring.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

