தன்னுடைய 90 வயது பாட்டி மீது அதிக பாசம் கொண்டுள்ள லத்திகா பாலசந்தர், 23, ஒரு முறை பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய தோலைக் கவனித்தார். பாட்டியின் தோலைச் செல்லமாக வருடி விளையாடிய லத்திகா, அந்தத் தோலையே மையப்படுத்தி ஆடை ஒன்றை வடிவமைக்கத் தொடங்கினார்.
சிங்கப்பூரில் அண்மையில் நடந்தேறிய 'எஸ்ஜிஃபேஷன்நவ்2022' (SGFASHIONNOW 2022) எனும் கண்காட்சியில், 'பிளர்ட் போடிஸ்' (Blurred Bodies) எனப் பெயரிடப்பட்ட அந்த ஆடை வைக்கப்பட்டது.
சென்னையில் பிறந்த லத்திகா, தந்தையின் வேலை காரணமாக மும்பையில் சில காலம் இருந்தார். அங்கு 'காட்சிக் கலைகள்' பாடத்தைக் கற்றபோது ஆடை அலங்காரம் மீது அவருக்கு நாட்டம் ஏற்பட்டது.
ஆடை அலங்காரத் துறையில் கால்பதிக்க வேண்டுமென்ற வேட்கையில் அவர் இளங்கலைப் படிப்புக்கு ஆடைத் தொழில்துறையை தேர்ந்தெடுத்தார். ஆடை அலங்கா ரத் துறையில் பட்டப்படிப்பை பயில்வதற்கு லாசால் கலைக் கல்லூரியே சிறந்தது என முடிவெடுத்து 2017ல் இங்கு வந்தார். கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் கற்றல் பயணத்திற்காக இந்தோனீசியாவின் பாலி தீவிற்குச் சென்றபோது ஆடைத் தயாரிப்பு தொடர்பான பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.
அதுவரை ஃபேஷன் என்றால் இப்படித்தான் இருக்கும், பெண் ஆடை வடிவமைப்பாளர்கள் பெண்களுக்கு மட்டுமே ஆடை தயாரிக்க வேண்டும் என நினைத்திருந்த லத்திகாவுக்கு அந்தப் பயணம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
சிங்கப்பூர் திரும்பியதும் லத்திகாவின் இறுதி ஆண்டு ஒப்படைப்பைச் சமர்ப்பிக்கும் தேதி நெருங்கிக்கொண்டிருந்தது. பட்டம் பெறுவதற்கான ஒப்படைப்பாக அதைக் கருதாமல், தன்னைப் பிரதிபலிக்கும் ஒரு தனித்துவமான ஆடையாக அது இருக்கவேண்டுமென்று முடிவெடுத்தார். அப்பொழுதுதான் அவர் விடுமுறைக்காக இந்தியா செல்லும் வாய்ப்பு அமைந்தது.
வயதானாலும் மனிதர்களுக்கிடையே வேறுபாடு இல்லை என்றும் நமது உடல் ஒரே விதமாகத்தான் செயல்படுகிறது என்றும் கருதிய லத்திகா, பாட்டியுடன் கொண்டிருந்த பிணைப்பை அடிப்படையாகக் கொண்டு ஆடை தயாரித்தார்.
ஆண்டுதோறும் நடைபெறும் 'மென்'ஸ் ஃபோலியோ டிசைனர் ஆஃப் த இயர்' விருதுக்கு (Men's Folio Designer Of The Year Award) லத்திகா பதிவு செய்தார். அதில் 2020ஆம் ஆண்டு விருதுபெற்ற லத்திகா, "என் படைப்பின் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருந்தது. என் உணர்வுகளை ஒன்றிணைத்து வடிவமைக்கப்பட்ட இந்த ஆடைக்கு இந்த விருது சமர்ப்பணம்," என்றார்.
லத்திகாவின் பெற்றோர் நாளடைவில் தங்கள் மகளின் ஆற்றலை உணர்ந்து அவருக்கு ஊக்கமளித்தனர். பேத்தி லத்திகா அன்றொரு நாள் தன் தோலைத் தொட்டு விளையாடியதற்கு இதுதான் காரணமா என்று நகைத்தவாறு பேத்தியின் திறமையைக் கண்டு வியக்கிறார் லத்திகாவின் பாட்டி.
தற்போது, அமெரிக்காவில் ரோட் தீவிலுள்ள வடிவமைப்புப் பள்ளியில் நுண்கலைத் துறையில் முதுகலை பட்டம் பயிலும் லத்திகா, கண்காட்சியில் வைக்கப்பட்ட தனது ஆடை வடிவமைப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறினார்.
"ஆடை அலங்காரம் என்பது ஒருவர் தன்னையே அறிந்துகொள்ளும் ஒன்று. வெறும் உடலை மறைக்கும் துணி என்றில்லாமல் ஓர் ஆடையை நாம் ஏன் அணிகிறோம், அதன் மூலம் நாம் சமுதாயத்திற்கு என்ன கூற விரும்புகிறோம் என்பதே என்னைப் பொறுத்தவரை ஆடை அலங்காரம்," என்று கூறினார் இளையர் லத்திகா.
செய்தி: அனுஷா செல்வமணி

