மரண தண்டனை குறித்த விவாதம்: அமைச்சர் சண்முகத்தின் அழைப்பை மறுத்த ரிச்சர்ட் பிரான்சன்

மரண தண்டனை குறித்த விவாதம்: அமைச்சர் சண்முகத்தின் அழைப்பை மறுத்த ரிச்சர்ட் பிரான்சன்

1 mins read
57e2eb8a-6cab-4289-aa9a-f28d593974ca
படம்: புளூம்பெர்க் -

சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகத்துடன் நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதம் செய்ய விடுக்கப்பட்ட அழைப்பை பிரிட்டிஷ் செல்வந்தர் ரிச்சர்ட் பிரான்சன் மறுத்துள்ளார். மரண தண்டனை குறித்து அமைச்சருடன் விவாதம் செய்ய அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தத் தலைப்பையொட்டி தொலைக்காட்சியில் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது என்று பிரான்சன் குறிப்பிட்டார். அதற்குப் பதிலாக சிங்கப்பூர் அரசாங்கம் சம்பந்தப்பட்ட உள்ளூர் அமைப்புகளுடன் கலந்துரையாடல் நடத்துவது ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்றார் அவர்.

சிங்கப்பூர் அரசாங்கம் போதைப் பொருள் கடத்துபவர்களைக், குறிப்பாக ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் சிறுபான்மை சமூகத்தினரையும் தூக்கிலிட முனைப்பாக இருப்பதாக பிரான்சன் தனது வலைபதிவில் முன்னதாகப் பதிவு செய்தார்.

அவருடைய கருத்தை நிராகரித்த உள்துறை அமைச்சு, மரண தண்டனை குறித்து அமைச்சர் சண்முகத்துடன் விவாதம் செய்ய அவருக்கும் அழைப்பு விடுத்தது. தொலைக்காட்சி விவாதம் செய்வதற்குப் பதிலாக உள்ளூர் வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள், மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் ஆகியோருடன அரசாங்கம் கலந்துரையாடல் நடத்தலாம் என பிரான்சன் கருத்துரைத்துள்ளார். மரண தண்டனை குற்றங்களைக் குறைக்கும் என்ற சிங்கப்பூரின் நிலைப்பாட்டில் ஆதாரம் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூருக்குள் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என தகவல், தொடர்பு அமைச்சரும், உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசபின் டியோ சில தினங்களுக்கு முன் குறிப்பிட்டார்.