முதலாளியால் பார்வை இழந்த பணிப்பெண் உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணினார்

முதலாளியால் பார்வை இழந்த பணிப்பெண் உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணினார்

2 mins read
5c866de2-9d7b-4587-996f-07b20f600418
கண் பார்வை இழந்து சுகியெம் (நடுவில்) படம்: இல்லப் பணிப்பெண்கள் நிலையம் -

முதலாளியின் துன்புறுத்தலுக்கு ஆளாகிய சுகியெம் சமத் ராதிமா என்ற வீட்டுப் பணிப்பெண், தன் கண் பார்வையை இழந்ததோடு, உடல் எடையும் குறைந்து, பல இன்னல்களுக்கு ஆளானார். அவரின் இடது காதும் சிதைக்கப்பட்டது.

ஆறு மாத காலத்திற்கு தனது முதலாளியான உம்மி கல்சும் அலி, 43, அவரை பல முறை காரணமில்லாமல் தாக்கினார். குற்றஞ்சாட்டப்பட்ட உம்மிக்கு 10 ஆண்டு காலம் சிறைத் தண்டனையும் $4,500 அபராதமும், அக்டோபர் 25 அன்று வழங்கப்பட்டது.

இந்த துன்புறுத்தல்கள் சுகியெத்தை மிகவும் பாதித்ததாகவும் இதனால் அவர் தனது உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்ததாகவும் கூறினார் சிங்கப்பூரின் இந்தோனீசிய தூதரக அதிகாரி யோசெப் டுட்டு.

இதன் பிறகு, சுகியெம் மருத்துவப் பரிசோதனைக்காக சிங்கப்பூரில் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் தங்கியிருந்தார். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அவருக்கு மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டது.

மருத்துவப் பரிசோதனையின்போது, அவரது கண்வலியைப் போக்க, சிகிச்சை தேவை என்று மருத்துவர்கள் கூறினார். இதற்காக, ஊழியர் நல நிதி, ஏப்ரல் மாதத்தில் அவரின் சிகிச்சைக்காக பணத்தை ஒதுக்கியது.

அதே நேரத்தில், குற்றஞ்சாட்டப்பட்ட உம்மி மற்றும் அவரது கணவருக்கு எதிராக வழக்குக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன. அவர்கள் செய்த துன்புறுத்தலை சுகியெம் மறக்க முடியவில்லை என்றும், அவர்களை இப்போதைக்கு மன்னிக்க முடியாது என்றும் கூறினார்.

இதில், கண்பார்வை இழந்த சுகியெம், தன் மகனின் சிரிப்பையும், பேரப்பிள்ளையை பார்க்க முடியாத நிலையையும் நினைத்து வருந்துகிறார் என்று அதிகாரி யோசெப் கூறினார். 2019இல் அவர் சிங்கப்பூருக்கு வந்தபோது, தன் சொந்த ஊரான இந்தோனீசியாவின் செமராங்கில், ஒரு மளிகை கடையை வைத்து நடத்துவது அவரின் நீண்ட கால கனவாக இருந்தது. ஆனால் இப்போது, அன்றாட செயல்களை செய்யவே அவர் இன்னும் சிரமப்பட்டு வருகிறார்.

வழக்கு முடிந்துவிட்டதை எண்ணி சுகியெம் மகிழ்ச்சியடைந்தாலும், தமது நீண்ட கால கனவை நிறைவேற்ற முடியாமல் போனதை நினைத்து அவர் வருந்துகிறார்.

அதே நேரத்தில் அவர் சொந்த ஊருக்கு திரும்பிய பிறகு, உடல் நலம் சரியாக வருவதோடு, முகத்தில் சிரிப்போடு காணப்படுகிறார் என்று அதிகாரி யோசெப் கூறினார்.