தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உள்துறை அமைச்சு அதிகாரிகளுக்கு 3% - 10% சம்பள உயர்வு

2 mins read
d9e9b0d1-f886-4714-a4d0-f0d2e8e9eda1
இந்த முறை அமைச்சின் சீருடை சேவைகள், அமைச்சின் சேவைகள் (குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம்), உள்துறைக் குழுவின் நிபுணத்துவத் திட்டம், வர்த்தக விவகாரப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் அனைவருக்கும் இந்த சம்பள உயர்வு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உள்துறை அமைச்சில் பணியாற்றும் சுமார் 22,000 அதிகாரிகளுக்கு அடுத்த ஆண்டிலிருந்து அவர்களின் மொத்த மாதச் சம்பளத்தில் மூன்று முதல் பத்து விழுக்காடு உயர்வு வழங்கப்படும்.

நேற்று இந்த அறிவிப்பை விடுத்த உள்துறை அமைச்சு, இந்த முறை அமைச்சின் சீருடைச் சேவைகள், அமைச்சின் சேவைகள் (குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம்), உள்துறைக் குழுவின் நிபுணத்துவத் திட்டம், வர்த்தக விவகாரப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் அனைவருக்கும் இந்த சம்பள உயர்வு பொருந்தும் என்று தெரிவித்தது.

அதிகாரிகளின் தற்போதைய சம்பளம் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப உள்ளதா, அது சிறந்த அதிகாரிகளை ஈர்க்கவும் தக்கவைத்துக் கொள்வதற்கும் போட்டித்தன்மையுடன் விளங்குகின்றனவா என்று கவனமாகப் பரிசீலிக்கப்பட்ட பிறகு இந்தச் சம்பளச் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன என்று அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்துறைக் குழுவில் அதிகாரிகளுக்குப் பயனுள்ள வேலை முன்னேற்ற வாய்ப்புகளை வழங்கி அவர்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும் அமைச்சு சொன்னது.

திறனாளர்களை ஈர்க்கவும் அவர்களை வேலையில் தக்கவைத்துக்கொள்ளவும் இவ்வாண்டு முற்பகுதியில் பொதுச் சேவை அதிகாரிகளுக்கு சம்பளச் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சும் தனது அதிகாரிகளுக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பரில், பொதுச் சேவை பிரிவு, தனது நிர்வாகத் துறை அதிகாரிகளுக்கும் நீதித்துறை மற்றும் குறிப்பிட்ட பதவி வகிப்பவர்களுக்கும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5% முதல் 12% வரை சம்பள உயர்வை அறிவித்தது.

கடந்த ஜூன் மாதம், பொதுச் சேவைப் பிரிவு, 23,000 அரசாங்க அதிகாரிகள் 5% முதல் 14% வரை சம்பள உயர்வை ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பெறுவார்கள் என்று அறிவித்தது.

இதற்கிடையே, கல்வி அமைச்சும் தனது 35,000 ஆசிரியர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து 5% முதல் 10% வரை சம்பள உயர்வு கிடைக்கும் என்று கடந்த ஆகஸ்ட்டில் அறிவித்தது.

"பொதுத் துறையிலிருந்து விலகும் ஊழியர்கள் எண்ணிக்கை அனைத்துப் பிரிவுகளிலும் அதிகரித்து வருகிறது. உயர்மட்ட வேலைப் பளு, சம்பளம், மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் இல்லாமை போன்றவை அவர்கள் வேலையைவிடுவதற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன," என்று பொதுச் சேவைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

2021ல் அரசாங்க சேவையின் மேலாண்மை நிர்வாகத் திட்டத்திலேயே ஆக அதிகமாக 9.9% விகிதத்தினர் வேலையை விட்டுச் சென்றனர். இது கடந்த பத்து ஆண்டுகளில் ஆக உயர்வான விகிதம் என்றும் கூறப்பட்டது.