போதைப்பொருள் கடத்தல்: மரண தண்டனை விதிக்கப்பட்டவர் குற்றமற்றவர் எனத் தீர்ப்பு

போதைப்பொருள் கடத்தல்: மரண தண்டனை விதிக்கப்பட்டவர் குற்றமற்றவர் எனத் தீர்ப்பு

3 mins read
4df5299d-352f-4614-8937-34e94434c9d7
-

போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசிய ஆடவர் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 37 வயது புனிதன் கணேசன், 2020ல் போதைப்பொருள் கடத்தியதாகத் தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனைக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அவர் நிரபராதி எனத் தீர்ப்பளித்துள்ளனர்.

சண்முகம் வேலு, முகமது சுஹிஃப் ஆகிய இரு ஆடவர்களுடன் இணைந்து புனிதன் ஹெரா­யின் போதைப்பொருளைக் கடத்தியதாகக் முன்னதாக குற்றம் நிரூபிக்கப்பட்டது. மலேசியரான சண்முகத்தை சுஹிஃப்புக்கு புனிதன் அறிமுகப்படுத்தியதாகக் கூறப்பட்டது. இம்மூவரின் சந்திப்பு 2011 அக்டோபர் 12ஆம் தேதி வெஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் நடந்ததாகக் குறிப்பிடப்பட்டது. அன்று காலை இந்தச் சந்திப்பு நடந்ததற்கான போதிய ஆதாரம் இல்லை என்பதால் புனிதனை விடுதலை செய்யுமாறு மேல்முறையீடு நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அந்தச் சந்திப்பு நடந்து 16 நாள்கள் கழித்து, அதாவது 2011 அக்டோபர் 28ஆம் தேதியன்று சிங்கப்பூரரான சுஹிஃப்பைச் சந்திக்க சண்முகம் சிங்கப்பூருக்கு வந்தார். அவரிடம் குறைந்தது 28.5 கிராம் ஹெரா­யின் போதைப்பொருள் இருந்ததாகக் கூறப்பட்டது. இவ்விரு ஆடவர்களும் கைதுசெய்யப்பட்டு, 2015ல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டது. அப்போது 30 வயதான சண்முகத்திற்கு ஆயுள் தண்டனையும், 15 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. அப்போது 46 வயதான சுஹிஃப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

விசாரணையின்போது, போதைப்பொருளைக் கடத்தும் திட்டத்தை புனிதன் தீட்டியதாக சண்முகம் கூறியுள்ளார். மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட புனிதன், சிங்கப்பூருக்கு 2016 ஜனவரி 21ஆம் தேதியன்று அழைத்துவரப்பட்டார். அவருடைய வழக்கு 2018ல் தொடங்கியது. போதைப்பொருள் கடத்தியதில் அவருக்கு முக்கியப் பங்கு இருந்ததாக நிரூபிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.

மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள், 2011 அக்டோபர் 12ஆம் தேதி அந்த மூவரிடையே சந்திப்பு நடந்தது என நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்று கூறினர். 2011 அக்டோபர் மாதம் 1, 12, 18, 24, 25, 28 ஆகிய தேதிகளில் சண்முகம் சிங்கப்பூரில் இருந்ததாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் பதிவுகள் காட்டுகின்றன.

அக்டோபர் 12ஆம் தேதியன்று அவர் காலை 7.24 மணியிலிருந்து 9.36 மணிவரை சிங்கப்பூரில் இருந்தார். புனிதன் அக்டோபர் 11ஆம் தேதியன்று மாலை 3.10 மணியிலிருந்து இரவு 10.47 மணிவரையும் அக்டோபர் 12ஆம் தேதியன்று காலை 7.04 மணியிலிருந்து பிற்பகல் 12.19 மணிவரையும் சிங்கப்பூரில் இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் மூவரும் பிற்பகல் அல்லது மாலை நேரத்தில் சந்தித்தாக சண்முகமும் சுஹிஃப்பும் கூறியுள்ளனர்.

அக்டோபர் மாதம் 12ஆம் தேதி மட்டுமே சண்முகமும் புனிதனும் சந்தித்திருக்க முடியும் என்று நீதிபதி டே சுட்டிக்காட்டினார். அன்றுகூட சிங்கப்பூரிலிருந்து சண்முகம் காலை 9.36 மணிக்கும், புனிதன் பிற்பகல் 12.19 மணிக்கும் கிளம்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அக்டோபர் 12ஆம் தேதியன்று விடியற்காலையில் மட்டுமே மூவரும் சந்தித்து இருக்கமுடியும் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சந்திப்பு பிற் பகல் அல்லது மாலை நேரத்தில் நடந்தது என்று ஏன் கூறினர் என்பது புலப்படவில்லை என்றும் நீதிபதி டே குறிப்பிட்டார்.

புனிதனின் மேல்முறையீட்டுத் தீர்ப்பின் முடிவுக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்ட சண்முகம், சுஹிஃப் ஆகியோருடைய தண்டனைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேல்முறையீட்டு வழக்கில் புனிதனைப் பிரதிநிதித்தவர் மூத்த வழக்கறிஞர் என். ஸ்ரீநிவாசன்.