எக்ஸ்பிபி கொவிட்-19 கிருமி வகையால் ஏற்பட்ட தொற்று அலை தற்போது குறைந்து வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார். அந்தக் கிருமிவகையை சிங்கப்பூர் வெற்றிகரமாக முறியடித்துவிட்டது போலத் தெரிகிறது என்று அவர் கூறினார்.
அனைத்துலக சுகாதார நிர்வாகப் பயிற்சிக் கழகத்தின் 20வது ஆண்டு விழாவில் திரு ஓங் நேற்று கலந்துகொண்டு பேசினார். கடுமையான கட்டுப் பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கும் அணுகுமுறை ஆகியவை இல்லாது எக்ஸ்பிபி கிருமிவகையை சிங்கப்பூர் நன்கு சமாளித்திருப்பதாக அவர் தெரிவித்தார். நிலைமை மோச
மடைந்திருந்தால் உட்புறங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது, தடுப்பூசி அடிப்படையிலான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது போன்ற விதிமுறைகளை மீண்டும் விதிக்க அமைச்சுகள்நிலை பணிக்குழு தயாராக இருந்ததாக அமைச்சர் ஓங் கூறினார்.
"நல்ல வேளையாக எதிர்பார்த்ததைவிட தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை விரைவாக உச்சம் அடைந்து பிறகு குறையத் தொடங்கியது," என்றார் திரு ஓங்.
நேற்று முன்தினம் நண்பகல் நிலவரப்படி மேலும் 3,240 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, வேறொரு கிருமிவகையால் இன்னொரு கொவிட்-19 அலை ஏற்பட்டால் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படக்
கூடும் என்றும் அதற்கு சிங்கப்பூரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஓங் வலியுறுத்தினார்.

