முதலாளியின் துன்புறுத்தலால் இரு கண்களிலும் பார்வையிழந்த இந்தோனீசியப் பணிப்பெண் திருவாட்டி சுஜியம் சமாட் ரடிமா, தமது மகன் மற்றும் பேரனின் சிரிப்பை இனி காண இயலாது என்று சொல்லொண்ணாத் துயருடன் தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அவரது முதலாளி அவரை அடித்துத் துன்புறுத்தினார்.
இதன் காரணமாக அவரது இடது காதும் உருக்குலைந்து காணப்படுகிறது.
இந்தோனீசியாவில் உள்ள அவரது சொந்த ஊரான செமாராங்கிலிருந்து 51 வயது திருவாட்டி சுஜியம் நேற்று வாட்ஸ்அப் அழைப்பு மூலம் செய்தியாளர்களிடம் நேற்று பேசினார்.
"நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். என்னால் பார்க்க முடியவில்லை. எனது மகன், பேரனின் சிரிப்பைப் பார்க்க முடிவில்லை," என்றார் அவர்.
அவரது சிங்கப்பூர் முதலாளியான 43 வயது உம்மி கல்சும் அலி அவரை தொடர்ந்து குத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஒருமுறை துணியைக் காயவைக்க உதவும் கருவியைக் கொண்டு திருவாட்டி சுஜியத்தின் கண்களில் உம்மி கல்சும் அடித்தார்.
பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதற்காக உம்மி கல்சுமுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் $4,500 அபராதமும் விதிக்கப்பட்டது.
பார்வை இழந்த காரணத்தினால் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் திருவாட்டி சுஜியத்துக்கு ஏற்பட்டதாக சிங்கப்பூரில் இருக்கும் இந்தோனீசியத் தூதரகத்தில் உள்ள ஆலோசகரான திரு யோசெப் டுட்டு தெரிவித்தார். எனவே, அவருடன் கூடுதல் நேரம் செலவிட்டதாகவும் அவர் விரும்பும் உணவை வாங்கித் தர அவரை வெளியே அழைத்துச் சென்றதாகவும் திரு டுட்டு கூறினார்.

