வேலையிடப் பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்த தவறியதற்காக 500க்கும் மேற்பட்ட நிறுவனங்
களுக்கு மனிதவள அமைச்சு வேலை நிறுத்த உத்தரவைப் பிறப்பித்தது அல்லது அபராதம் விதித்தது.
மனிதள அமைச்சின் அதிகாரிகள் நடத்திய சோதனைகளின்போது அந்த நிறுவனங்கள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கவில்லை என்பது தெரியவந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்கும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒன்பது வார அதிரடிச் சோதனை நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.
தீவெங்கும் கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்து, தங்குமிடம், உணவுச் சேவைகள் போன்ற துறைகளைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்ட வேலையிடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது 558 நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சு தண்டனை விதித்தது. வேலையிடங்களில் ஊழியர்கள் வழுக்கி விழுவது, தடுக்கி விழுவது, உயரமான இடங்களிலிருந்து விழுவது போன்றவற்றைத் தடுக்கும் நோக்குடன் சோதனைகள் நடத்தப்பட்டன. இவ்வாண்டின் முதல் பாதியில் வேலையிடங்களில் ஊழியர்களுக்கு ஏற்பட்ட மிக மோசமான காயங்களுக்கு இந்த மூன்றும் முக்கியக் காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டது. விதிமுறைக்கு உட்படாத நிறுவனங்களுக்கு எதிராக 1,828 அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக மனிதவள அமைச்சு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது. இதில் 12 வேலை நிறுத்த உத்தரவுகளும் $499,150 பெறுமானமுள்ள 232 அபராதங்களும் அடங்கும்.
சில நிறுவனங்கள், வேலை
இடத்தின் தரையை முறையாகப் பராமரிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் சோதனையிட்டபோது தரையில் சில தரை ஓடுகள் இல்லாததைக் கண்டுபிடித்தனர்.
அதுமட்டுமல்லாது, சில வேலையிடங்களின் தரை ஈரமாக இருந்ததாகவும் அதனால் ஊழியர்கள் வழுக்கி விழும் அபாயம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
சில ஊழியர்கள் தகுந்த காலணிகளைப் பயன்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் வழுக்கி விழுவது, தடுக்கி விழுவது, உயரமான இடத்தி
லிருந்து விழுவது ஆகியவற்றிடமிருந்து அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
"வேலையிடத்தில் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பதை இது காட்டுகிறது. விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்காத நிறுவனங்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
"பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிறுவன உரிமையாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள் ஆகிய அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதில் மெத்தனப்போக்குடன் இருந்து
விடக்கூடாது. அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்," என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.

