செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
56ecce0d-cb3c-4e27-8316-151c7658766a
-

'வசதி குறைந்த குடும்பங்களுக்கு தாராள மனத்துடன் உதவுங்கள்'

வசதி குறைந்த குடும்பங்களுக்கு தாராள மனத்துடன் உதவ வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் அழைப்பு விடுத்துள்ளார். கொவிட்-19 நெருக்கடிநிலையால் இத்தரப்பினர்தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.

அதிபர் சவால் 2022 தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பேசிய அதிபர் ஹலிமா, வசதி குறைந்தோருக்கு உதவ அரசாங்கத் திட்டங்கள் இருக்கும்போதிலும் பொருளியலை நிலைகுலையச் செய்யும் நிகழ்வுகளால் அவர்களது வாழ்வாதாரம் மேலும் மோசமடையக்கூடும் என்று தெரிவித்தார். உலகளாவிய பணவீக்கம் விலைவாசியை அதிகரிக்கும் என்றும் பருவநிலை மாற்றமும் புவிசார் அரசியல் நெருக்கடிநிலையும் பொருளியலுக்கு அழுத்தம் தந்து வேலைகளைப் பாதிக்கும் என்றும் சொன்னார் அதிபர் ஹலிமா. குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ஆதரவு அளிப்போம் என்ற கருப்பொருளுடன் இவ்வாண்டில் அதிபர் சவால் அறநிதி திரட்டு நடைபெற்றது. இதற்கு முன் இல்லாத அளவாக இவ்வாண்டு அந்நிதிக்கு $13 மில்லியன் திரட்டப்பட்டது.

ஸ்கூலிங், அமேண்டா லிம்,

சென் வெய்க்கு அபராதம்

தென்கிழக்காசிய விளையாட்டுகளின்போது சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றத்தின் விதிமுறைகளை மீறியதற்காக தேசிய நீச்சல் வீரர்களான ஜோசஃப் ஸ்கூலிங், அமேண்டா லிம், தியோங் சென் வெய் ஆகிய மூவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்தபோது போதைப்பொருள் உட்கொண்டதை அந்த மூவரும் ஒப்புக்கொண்டதை அடுத்து மன்றம் அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஸ்கூலிங்கிற்கு $10,000 அபராதம் விதிக்கப்பட்டது. அவர் எதிர்காலத்தில் மீண்டும் போதைப்பொருள் உட்கொண்டால் இரண்டு ஆண்டுகளுக்கு முக்கிய நீச்சல் போட்டிகளில் அவர் பங்கெடுக்கத் தடை விதிக்கப்படும் என்று மன்றம் கூறியது.

போதைப்பொருள் உட்கொள்ள பயன்படுத்தப்படும் கருவி ஒன்றை வைத்திருந்ததற்காக லிம்முக்கு மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அவருக்கு $2,800 அபராதம் விதிக்கப்பட்டது. தியோங்கிற்கு $3,200 அபராதம் விதிக்கப்பட்டது.

மயக்கமருந்து தந்து மனைவிகளை சீரழித்ததாக நால்வர் ஒப்புதல்

சொந்த மனைவிகளுக்கு மயக்கமருந்து கொடுத்து அவர்கள் மயங்கியதும் அவர்களைத் தங்களுக்கிடையே பகிர்ந்துகொண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு ஆடவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மூவர் தங்கள் சொந்த மனைவிகளும் முன்னாள் மனைவியும் பிறரால் சீரழிக்கப்படுவதை அருகில் இருந்து பார்த்தனர். சில காட்சிகளை அவர்கள் காணொளி எடுத்தனர். இன்னோர் ஆடவரின் மனைவியை 37 வயது ஆடவர் ஒப்புக்கொண்டார்.

அந்த ஆடவர்களுக்குக் கடுமையான சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசாங்க வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த 'மனைவி பகிர்வு'க்கு முக்கியக் காரணமாக இருந்த ஆடவர், தமது குற்றத்தை ஒப்புக்கொள்வதாக இருந்தது. ஆனால் அவரைப் பிரதிநிதித்த வழக்கறிஞர்கள் விலகியதை அடுத்து, அவர் புதிய வழக்கறிஞரைத் தேடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தைக் காக்க குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட அந்த ஆடவர்களின் பெயர்களை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தம்மை வேறொருவர் பாலியல் வன்கொடுமை செய்யும் காணொளி தமது கணவரின் கைத்தொலைபேசியில் இருப்பதைப் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் பார்த்த பிறகு குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது.