சிங்கப்பூரர்கள் வெவ்வேறு காப்புறுதி நிறுவனங்களுடன் கொண்டுள்ள காப்புறுதித் திட்டங்களின் தொகுப்பை இனி சிங்கப்பூர் நிதித் தரவுப் பரிமாற்றம் (எஸ்ஜிஃபின்டெக்ஸ்) வழி காணலாம் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிதிச் சேவைகளில் புத்தாக்கத்தை மேலும் வளர்த்திட, அரசாங்கம் $150 மில்லியனை முதலீடு செய்யவுள்ளதாகவும் காசோலைகள் அனைத்தையும் ஒழிப்பதற்கான அடுத்த படியை எடுக்கவுள்ளதாகவும் அவர் நேற்று நடைபெற்ற நிதித் தொழில்நுட்ப விழாவின்போது தமது தொடக்க உரையில் குறிப்பிட்டார்.
கடன்கள், வைப்புகள், மத்திய சேமநிதிக் கணக்குகளில் உள்ள தொகைகள், முதலீட்டு விவரங்கள் போன்றவற்றைப் பார்வையிடுவதற்காக மக்களின் நிதித் திட்டமிடுதலுக்கென இந்த 'எஸ்ஜிஃபின்டெக்ஸ்' சேவை 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடப்புக்கு வந்தது.
'எஸ்ஜிஃபின்டெக்ஸ்' தளத்தில் காப்புறுதித் திட்டங்களைப் பார்வையிடும் வசதி சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தங்களின் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகளை சிங்கப்பூரர்கள் எளிதில் அடையாளங்காண முடியும். அத்துடன் தங்களின் நிதி நிலைமை குறித்து மேலும் விரிவான ஒரு பார்வையும் கிடைக்கும் என்று நிதி அமைச்சராகவும் உள்ள திரு வோங் குறிப்பிட்டார்.
தற்போது புதிதாக இணைக்கப்பட்ட காப்புறுதி அம்சத்தில் 'ஏஐஏ', 'ஏஎக்ஸ்ஏ', 'கிரேட் ஈஸ்டர்ன்', 'இன்கம்', 'மனுலைஃப்', 'புருடென்ஷல்', 'சிங்லைஃப்', 'அவிவா' ஆகிய காப்புறுதி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே, 'எஸ்ஜிஃபின்டெக்ஸ்' தளத்தை மாதம் சுமார் 30,000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் 1.2 மில்லியன் முறை தரவுகள் தொடர்பான கோரிக்கைகள் பதிவாகியுள்ளன என்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்தது.
'எஸ்ஜிஃபின்டெக்ஸ்' சேவையில் மேலும் அதிக நிதி நிலையங்களும் கூடுதல் நிதி விவரங்களும் சேர்க்கப்படவுள்ளன.