சிங்கப்பூர் தேசிய கண் சிகிச்சை நிலையம், கண் பராமரிப்புப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கும் கண்பராமரிப்பு தொடர்பான ஆய்விற்கும் உதவும் புதிய நிலையத்தை அமைத்துள்ளது.
'எஸ்என்இசி கோ' என்பது இதன் பெயர்.
பார்வை இழப்பு தொடர்பில் தென்கிழக்காசிய வட்டாரம் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள இந்த நிலையம் கைகொடுக்கும்.
இந்த வட்டார நாடுகளைச் சேர்ந்த கண் மருத்துவர்களுக்கும் இத்துறையில் பணியாற்றும் தாதியர், உதவி சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள் ஆகியோருக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படும். இதன் தொடர்பில் மின்னிலக்கத் தளம் ஒன்றும் உருவாக்கப்படும்.
உலகச் சுகாதார நிறுவனம், பார்வை இழப்பைத் தடுப்பதற்கான அனைத்துலக நிறுவனம் போன்றவற்றுடன் பங்காளித்துவ முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.