தாய்லாந்தின் புக்கெட் தீவில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த 29 வயது ஆடவர் ஒருவர் மாண்டார்.
அவர் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் ஆறு சக்கர லாரி ஒன்றுடன் மோதியதால் விபத்து நேர்ந்தது.
மோட்டார்சைக்கிளில் ஆடவருடன் இருந்த மற்றொரு சிங்கப்பூரரான 29 வயது பெண்ணின் உடலுக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டது.
அப்பெண்ணின் பெயர் நாட்டலி சிங்ஹுய் யீ என்று பேங்காக் போஸ்ட் ஊடகம் அடையாளம் கண்டது.
மாண்ட ஆடவரைப் பற்றிய தகவல்கள் குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்தும் வரை அவரின் அடையாளம் வெளியிடப்படாது.
கத்து வட்டாரத்தில் விபத்து நிகழ்ந்ததாக உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (3 நவம்பர்) காலை 11.45 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் வந்ததாக பேங்காக் போஸ்ட் தெரிவித்தது.
சம்பவம் தொடர்பில் தாய்லாந்து அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியது.
பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களின் குடும்பத்தாருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.