தாய்லாந்தின் புக்கெட் தீவில் நேற்று முன்தினம் காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 29 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
அவர் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள், ஆறுசக்கர சரக்கு வாகனத்தின்மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த நட்டலி சிங்ஹுய் யி என்ற இன்னொரு சிங்கப்பூரர் காயமடைந்தார் என்று தி பேங்காக் போஸ்ட் செய்தி தெரிவிக்கிறது. அவருக்கும் வயது 29.
கத்து மாவட்டத்தில் நிகழ்ந்த இவ்விபத்து குறித்து காலை 11.45 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அச்செய்தி கூறியது. மலைப்பாங்கான சாலையில் விபத்து நிகழ்ந்ததாகவும் அச்செய்தி குறிப்பிட்டது.
எதிரில் வந்த அந்த மோட்டார்சைக்கிள், வளைவில் கட்டுப்பாட்டை இழந்து தமது வாகனத்தின்மீது மோதியதாக அந்தச் சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் காவல்துறையிடம் கூறினார்.
மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்ற அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டுவிட்டார் என்று கூறப்பட்டது. மாண்டவரின் குடும்பத்திற்குத் தகவல் தெரிவிக்கும்வரை அவரின் பெயர் வெளியிடப்படாது.
மாண்டவரும் காயமடைந்த பெண்ணும் பத்தோங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
இவ்விபத்து தொடர்பில் தாய்லாந்து அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தூதரக உதவி வழங்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சு கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
"மாண்ட சிங்கப்பூரரின் குடும்பத்தினருக்கு வெளியுறவு அமைச்சு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறது. காயமுற்ற சிங்கப்பூரர் விரைவில் முழுமையாக நலம்பெறுவார் என்று நம்புகிறோம்," என்று அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.