ஐக்கிய நாட்டு நிறுவனத் தடையை மீறி வடகொரியாவுக்கு பொருள்களை விநியோகம் செய்ததாக சிங்கப்பூர் வர்த்தகர் ஒருவரை அமெரிக்கா தேடிவருகிறது.
பல முறை வடகொரியாவுக்கு எரிபொருள் விநியோகித்ததாகவும் கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருள் நிரப்பியதாகவும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்ற உதவியதாகவும் வர்த்தகர் குவெக் கீ செங் (படம்) மீது குறைகூறப்படுகிறது.
62 வயதாகும் குவெக்கின் எண்ணெய்க் கப்பல் ஒன்றை அமெரிக்க வேண்டுகோளுக்கு இணங்க கம்போடியா சென்ற ஆண்டு பறிமுதல் செய்தது. இதையடுத்து அமெரிக்க நீதிமன்றம் அவருக்குக் கைதாணை பிறப்பித்தது.
தலைமறைவாகியுள்ள குவெக்கைப் பற்றி தகவல் தருபவருக்கு ஐந்து மில்லியன் டாலர் (ஏழு மில்லியன் வெள்ளி) வெகுமதி தரப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
அண்மையில் வடகொரியா எண்ணற்ற ஏவுகணைகளைப் பாய்ச்சியது. அவற்றில் ஒன்று தென்கொரிய நீர்ப் பகுதியில் விழுந்தது.
இதனையடுத்து ஐக்கிய நாட்டு நிறுவனம் வடகொரியா மீதான தடைகளைக் கடுமையாக அமலாக்கம் செய்ய வலியுறுத்திய வேளையில் அமெரிக்காவின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

