ஃபேர்பிரைஸ் நிறுவனம் அடுத்த ஆண்டின் முற்பாதியில், பயனாளர்கள் அதிகம் வாங்கக்கூடிய 500 பொருள்களுக்கு 1% விலைக்கழிவை வழங்கவிருக்கிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து பொருள், சேவை வரி 7 விழுக்காட்டில் இருந்து 8 விழுக்காட்டுக்கு உயரவிருப்பதால், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகள் குறித்த கவலையைக் குறைக்கும் முயற்சி இது.
ஃபேர்பிரைசின் எல்லாக் கடைகளுக்கும் அதன் இணைய வர்த்தகத் தளத்திற்கும் இது பொருந்தும். நிறுவனத்தின் சொந்தத் தயாரிப்புகளுடன் மற்ற நிறுவனப் பொருள்களுக்கும் விலைக்கழிவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அரிசி, எண்ணெய், இறைச்சி, வீட்டைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் பொருள்கள் ஆகியவை இவற்றில் அடங்கும்.
ஃபேர்பிரைஸ் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி விபுல் சாவ்லா இந்தத் தகவல்களை வெளியிட்டார். முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ள பணவீக்கம் வாடிக்கையாளர்களின் அன்றாட வாழ்க்கையை பாதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஃபேர்பிரைஸ் நிறுவனம் சென்ற மாதம் இத்தகைய சில ஆதரவு நடவடிக்கைகளை அறிவித்தது.
50 அத்தியாவசியப் பொருள்களின் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றமின்றி இருப்பது ஒரு நடவடிக்கை. அரிசியில் தயாரிக்கப்படும் மூன்று உணவுப் பொருள்களின் விலையைக் குறைத்தது மற்றொரு நடவடிக்கை.
விலை மாற்றத்தினால் ஏற்படும் சிரமத்தைக் குறைக்க 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து உணவுப் பொருள்களை வரவழைப்பதாக அது கூறியது.