திரு டான் ஆ பாங் என்ற 67 வயதுள்ள தன் தந்தையைக் கொன்றதாக 31 வயதுள்ள டான் சியூ யான் என்ற அந்த ஆடவரின் மகள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
செங்காங்கில் உள்ள ரிவர்வேல் டிரைவில் இருக்கும் 190A புளோக்கின் 15வது மாடி வீடு ஒன்றில் கடந்த வியாழக்கிழமை இரவு 8 மணிக்கும் அடுத்த நாள் அதிகாலை 5.25 மணிக்கும் இடையில் அந்த மாது தன் தந்தையைக் கொலை செய்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அந்த மாதை ஒருவார காலம் மத்திய காவல்துறை பிரிவில் விசாரணைக்காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை காவல்துறை கேட்டுக்கொண்டது.
குற்றம் சுமத்தப்பட்ட மாதின் சார்பில் வழக்கறிஞர் யாரும் முன்னிலையாகவில்லை. அவர் இந்த மாதம் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாவார்.
கொலை செய்ததாகக் கூறும் குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அந்த மாதுக்கு மரண தன்டணை விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தங்களுக்கு அழைப்பு வந்ததை அடுத்து காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் அன்று சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தன.
அந்தப் புளோக்கில் இருக்கும் அடுக்குமாடி வீடு ஒன்றின் உள்ளே 67 வயது முதியவர் ஒருவர் உடலில் பல இடங்களில் காயம் அடைந்த நிலையில் அசைவின்றிக் கிடந்ததை அதிகாரிகள் பார்த்ததாக காவல்துறை முன்பு தெரிவித்தது.
அந்த ஆடவர் இறந்துவிட்டார் என்று குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ அதிகாரி சம்பவ இடத்திலேயே உறுதிப்படுத்தினார். அதையடுத்து அதிகாரிகள் அந்த மாதைக் கைது செய்தனர்.
இதற்கு அடுத்த நாளான நேற்று அந்த மாது மீது கொலைக் குற்றம் சமத்தப்பட்டது. மாண்டுவிட்ட ஆட வரின் மனைவி அண்மையில் புற்றுநோயால் இறந்துவிட்டார்.
அந்த ஆடவர் 10 ஆண்டுகளுக்கு முன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.
கணவன்-மனைவி இருவரும் அமைதியானவர்கள். அவர்களைப் பார்க்க யாராவது எப்போதாவது வருவதுண்டு என்று அக்கம்பக்கத் தினர் தெரிவித்து இருந்தனர்.

