தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையின் மூன்றாம் கட்டம் இம்மாதம் 13ஆம் தேதி திறக்கப்பட்டவுடன் அதன் நிலையங்களில் உச்சம் அல்லாத நேரங்களில் ஆறு நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் வரும்.
தற்போது அந்த நேர இடைவெளி ஒன்பது நிமிடங்களாக உள்ளது.
உச்சநேரங்களில் தற்போது உள்ள ஐந்து நிமிட நேர இடை வெளியில் எந்த மாற்றமும் இல்லை என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் பாதையில் பயணப் பயன்பாடு அதிகரிக்கும்போது ரயில்களுக்கிடையேயான நேர இடைவெளி மீண்டும் மறுஆய்வு செய்யப்படும் என ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
காலை 7 மணி முதல் 9 மணி வரையிலான உச்சநேரங்களில் மற்ற ரயில் பாதைகளில் இரண்டு முதல் மூன்று நிமிடங்களில் ரயில்கள் வருகின்றன. உச்சம் அல்லாத நேரங்களில் அந்த நேர இடைவெளி ஐந்து முதல் ஏழு நிமிடங்கள்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் அதிகரிக்கவிருக்கும் ரயில் பயணங்களையும் பயணிகள் வரத்தையும் முன்னுரைத்து அதிகப்படியான சோதனைகளைச் செய்துள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையமும் ரயில் சேவை நிறுவனமான எஸ்எம்ஆர்டியும் தெரிவித்தன.
ஸ்டீவன்ஸ் முதல் கரையோரப் பூந்தோட்டம் வரை மேலும் 11 நிலையங்கள் 13ஆம் தேதி திறக்கப்படுகின்றன.
ஏற்கெனவே ஒன்பது நிலையங்கள் அந்தப் பாதையில் செயல்படுகின்றன.

