ஆ. விஷ்ணு வர்தினி
ஆண்டுதோறும் உயர்கல்வி மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி வரும் சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரியக் கல்விநிதித் திட்டம் இவ்வாண்டு 125 மாணவர்களுக்கு $231,500 அளவிலான உதவித்தொகை வழங்கியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளாக இயங்கி வரும் இந்த கல்விநிதியின் மூலம், இவ்வாண்டுடன் மொத்தம் ஐந்து மில்லியன் வெள்ளிக்கு மேல் நிதி வழங்கப்பட்டுள்ளது.
பலதுறை தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக்கழகங்கள், பொது பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் என நான்கு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் பிஜிபி மண்டபத்தில் கல்விநிதி விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
அவ்வாறு பயனடைந்த பி.எஸ்.பி கல்விக்கழகத்தின் தாதியர்துறை மாணவரான திருமதி சித்ரா சண்முகம், ஒற்றைத் தாயாராக தனது மூன்று மகள்களையும் பராமரித்துக்கொண்டே பகுதிநேரமாக மேற் படிப்பு மேற்கொள்வதற்கு சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரிய கல்விநிதி பெரிதும் கைகொடுத்துள்ளதாக பகிர்ந்துகொண்டார்.
தற்போது கே. கே. மருத்துவ மனையில் மூத்த தாதியராக பணிபுரியும் 41 வயது திருமதி சித்ரா, மேற்படிப்புக்குப் பின்னர் தாதிமை நிர்வாகியாகும் எண்ணம் கொண்டுள்ளார்.
"என்ன வந்தாலும் எனது வாழ்க்கைத்தொழிலில் மேன்மேலும் உயரவேண்டும் என்ற திடத்தை இந்த ஊக்கத்தொகை அளித்துள்ளது," என்றார் அவர்.
பாலர் பள்ளி தமிழாசிரியரான 21 வயது பவானி சுப்பிரமணியமும் இக்கல்விநிதியைப் பெற்றுள்ளார். ஆசிய அனைத்துலகக் கல்லூரியில் ஆரம்பக்கல்வி பயிலும் அவர், உடற்குறையுள்ள பாட்டி உட்பட ஏழு பேரைக் கொண்ட குடும்பத்திற்காக உழைத்து வருகிறார்.
பெற்றோருடன் வீட்டுச் செலவுகளைக் கவனித்து வரும் அவருக்கு சுயமாக பகுதிநேரப் படிப்பை மேற்கொள்ள இக்கல்விநிதி உதவியுள்ளது.
மற்றோர் இளையரான திரு ரதிஷன் ஹரிஹரனுக்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கேபின் குழுவில் இணைவது ஒரு நீண்டகால ஆசை.
முதலில் பொறியியல் பயின்ற அவர், விருந்தோம்பல் துறையில் தனது ஆர்வத்தைக் கண்டறிந்ததன் பின்னர் தற்போது சிங்கப்பூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விருந்தோம்பல் வர்த்தகப் படிப்பு பயின்று வருகிறார்.
ஒற்றைத் தாயாராக தன்னை கவனித்து வரும் அம்மாவுக்கு பாரமாக இல்லாமல், சொந்தக் காலில் நிற்பதற்கு இக்கல்விநிதி உதவுவதாக அவர் கூறினார்.
இவ்வாண்டின் மாணவர்களி்ல், மொத்தம் 49 பேர் தொழில்நுட்பக் கல்விக்கழகங்களையும் 32 பேர் பலதுறைத் தொழில் கல்லூரிகளையும் சேர்ந்தவர்கள்.
மேலும் 16 பேர் உள்ளூர் பல்கலைக்கழகங்களையும் 28 பேர் தனியார் கல்வி நிலையங்களையும் சேர்ந்த மாணவர்கள்.
தொடர்ந்து உழைக்க ஊக்குவிப்பு
கடினமாக உழைத்து இக்கல்வி நிதியைப் பெறும் அனைத்து மாணவர்களையும் மேன்மேலும் தொடர்ந்து உழைப்பதற்கு இவ் விருது ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார், சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரியக் கல்வி நிதியின் தலைவரும் இந்து ஆலோசனை மன்றத்தின் துணைத் தலைவருமான திரு என். புருஷோத்தமன்.
இவ்விருது சமூக சேவையைக் கட்டாயப்படுத்தாவிட்டாலும், மாணவர்கள் தம் வாழ்வில் மேம்படுவதோடு, வசதி குறைந்தோருக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும் என்றும் அவர் ஊக்குவித்தார்.
2009ஆம் ஆண்டு மறைந்த திரு சிவதாஸ் சங்கரனின் நினைவாக அமைக்கப்பட்டது, சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரிய கல்விநிதித் திட்டம்.
2011லிருந்து ஆரம்பநிலை பள்ளி மாணவர்களுக்கும், 2012லிருந்து உயர்கல்வி மாணவர்களுக்கும் இந்தக் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.