'ஒமேகா' ரகசிய கும்பலைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு நேற்று எட்டு ஆண்டு, ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சட்டவிரோத கும்பலுடன் தொடர்புடைய போதைப் பொருள் வர்த்தகத்தில் முஹமட் சுஃபியான் ரஸ்லி ஈடுபட்டார்.
போதைப் பொருள் கடத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு திட்டமிட்ட குற்றச்செயல் சட்டத்தின்கீழ் எட்டு பிரம்படி தண்டனையும் விதிக்கப்பட்டது.
கஞ்சா போன்ற போதையைத் தரும் 'மஷ்ரும்' அல்லது 'பட்டர்ஃபிளை' என்று அழைக்கப்படும் போதைப் பொருளை சட்டவிரோத ரகசியக் கும்பல் விற்றதாக நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக் கறிஞர் சோங் கீ என் தெரிவித்தார். 2019 மார்ச் மாதத்தில் ஹெர்மன்டோ அப்துல் தலிப், 45, என்பவரால் சுஃபியான் ரகசியக் கும்பலில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
சுஃபியானுக்கு பணம் தேவைப்பட்டதால் அந்த கும்பலில் அவர் சேர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
யூனோஸ் என்ற விநியோகிப்பாளரிடமிருந்து நாள்தோறும் போதைப்பொருளை பெறுவது சுஃபியானின் வேலையாக இருந்தது.
பின்னர் கேலாங்கில் உள்ள ஒரு காப்பிக் கடையில் நிறுத்தப்பட்ட சைக்கிள்களின் பின்பிறம் போதைப் பொருள் பெட்டியை சுஃபியான் வைக்க வேண்டும். இதர கும்பல் உறுப்பினர்களான 41 வயது ஷஃபி உஸ்மான், 53 வயது ஃபடில்லா ஹாரோன் சைக்கிளில் உள்ள போதைப் பொருளை பெற்றுக் கொள்வார்கள். பின்னர் ஷஃபியும் ஃபடில்லாவும் நாள் தோறும் 20 முதல் 30 வாடிக்கையாளர்களுக்கு போதைப் பொருள் பொட்டலத்தை $60 முதல் $70 வரை விற்றனர். சுஃபியான் தனது வேலைக்கு ஏறக்குறைய $20,000 சம்பாதித்தார்.
2019 ஜூலை 16ஆம் தேதி காப்பிக் கடையை மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்ட போது போதைப் பொருள் கடத்தல் தெரியவந்தது. அப்போது சுஃபி யான் மற்றும் கும்பலைச் சேர்ந்த மூவரிடமிருந்து 60 போதைப் பொருள் பொட்டலங்கள் கைப் பற்றப்பட்டன.