கரிமக் கழிவு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறை வேறியது. அதையடுத்து, சிங்கப்பூரில் 2024ல் இருந்து கரிமக் கழிவு வரி, ஒரு டன்னுக்கு $25 ஆகக் கூடும். இப்போது அந்த வரி டன்னுக்கு $5ஆக இருக்கிறது.
பிறகு 2026ஆம் ஆண்டிலும் 2027ஆம் ஆண்டிலும் அந்த வரி $45 ஆக உயரும். 2030ஆம் ஆண்டுவாக்கில் கரிமக் கழிவு வரி டன்னுக்கு $50க்கும் $80க்கும் இடைப்பட்ட அளவில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கரிமக் கழிவு வரியைக் கட்டம் கட்டமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிறுவனங்களுக்கு முன்ன தாகவே தெரிவிக்கப்பட்டு அவற்றுக்கு உரிய நேரம் கொடுக்கப்பட்டு கட்டம் கட்டமாக வரி உயர்வு இடம்பெறும் என்று அவர் குறிப்பிட்டார்.
கரிமக் கழிவு கட்டணத் திருத்த மசோதாவின் பேரில் நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தைத் தொடங்கி வைத்து பேசிய அமைச்சர், கரிமக் கழிவு வரி உயர்வதால் நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை குறைக்க உதவித் தொகை தொடர்பான ஓர் ஏற்பாடு, இந்த மசோதா திருத்தத்தில் இடம்பெற்று இருக்கிறது என்று அவர் கூறினார். விவாதத்தில் 10க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர்.
கரிமக் கழிவு உயர்வதற்குத் தோதாக தங்களைச் சரிசெய்துகொள்ள அதிகளவு கரிமக் கழிவை வெளியிடும் நிறுவனங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
எண்ணெய் மற்றும் எரிவாயு, வேதிப்பொருள்கள், உற்பத்தித் துறைகளைச் சேர்ந்த அத்தகைய நிறுவனங்கள் உலகச் சந்தையில் கடும் போட்டியை எதிர்நோக்கும் நிறுவனங்களாகும்.
அவற்றுக்குச் செலவும் அதிகம் என்பதை அமைச்சர் சுட்டினார்.
இப்போது ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சம் 25,000 டன் கரிமக் கழிவை வெளியிடும் நிறுவனங்கள் கரிம வரியைச் செலுத்த வேண்டும்.
இவற்றில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மின்சக்தி ஆலைகள் போன்ற 30 முதல் 40 பெரும் நிறுவனங்கள் உள்ளடங்கும்.
இவை நாட்டில் வெளியிடப்படும் கரிமக் கழிவில் 80%க்குக் காரணம். கரிமக் கழிவு வரியை நிறுவனங்கள் குறைத்துக்கொள்ள உதவும் வகையில் அந்நிறுவனங்கள் கரிம வர்த்தகச் சான்றிதழைப் பயன்படுத்தி வரி விதிக்கத்தக்க கரிமக் கழிவில் 5% வரைப்பட்ட கழிவுக்கான வரியை ஈடுசெய்துவிடலாம்.
முடிவில், புதிய அனைத்துலக கரிம வர்த்தகச் சான்றிதழ் ஏற்பாடு நிர்ணயிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

