தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானத்தில் இருந்த பயணி ஒருவர், விமானச் சிப்பந்தியிடம் திரும்பத் திரும்ப மதுபானம் கேட்டதோடு அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டவும் செய்தார்.
விமானம் சாங்கி விமான நிலையத்திற்கு வந்திறங்கியவுடன், விமான நிலைய காவல்துறையிடம் அப்பயணி ஒப்படைக்கப்பட்டார்.
இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த எஸ்ஐஏ பேச்சாளர், எஸ்கியூ711 விமானத்தில் பயணம் செய்த அந்தப் பயணி, உணவு சாப்பிடும் வேளையின்போது முறைகேடாக நடந்துகொண்டதாகக் கூறினார்.
"மதுபானம் தரும்படி அந்தப் பயணி பலமுறை கேட்டதைத் தொடர்ந்து, நிலவரத்தை ஆராய்ந்த எங்களுடைய விமானச் சிப்பந்திகள், விமானத்தில் இருந்த மற்ற பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, அவருக்கு மதுபானம் வழங்க பணிவான முறையில் நிராகரித்தனர்," என்று எஸ்ஐஏ பேச்சாளர் விவரித்தார்.
விமானச் சிப்பந்தியின் அறிவுறுத்தலுக்கு இணங்க அந்தப் பயணி மறுத்துவிட்டதாகவும் மற்ற பயணிகளுக்கு அவர் இடைஞ்சலை ஏற்படுத்தியதாகவும் எஸ்ஐஏ கூறியது.
விமானச் சிப்பந்தியிடம் அந்தப் பயணி தொடர்ந்து மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதை இணையத்தில் வலம்வரும் டிக்டாக் காணொளி காட்டியது.
அதையடுத்து, துணைக் காவல்துறை அதிகாரிகள் இருவர் அந்தப் பயணியை விமானத்திலிருந்து அழைத்துச் சென்றனர்.
இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி 500,000க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட அந்தப் பயணிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக எஸ்ஐஏ கூறியது.
"எங்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கே நாங்கள் தலையாய முன்னுரிமை அளிக்கிறோம். இந்தச் சம்பவத்தால் சிரமத்தை எதிர்நோக்கிய வாடிக்கையாளர்கள் அனைவரும் எஸ்ஐஏ மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறது," என்று அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.