கட்டுமான நிறுவனம் அமர்த்திய துணை ஒப்பந்த நிறுவனம் ஒன்று, ஐந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வைத்திருந்தது.
இதனை விசாரித்த மனிதவள அமைச்சுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
அந்த பிரதான கட்டுமான நிறுவனமே அதன் 268 சொந்த ஊழியர்களுக்கு சம்பள பாக்கி வைத்திருந்ததே அதற்குக் காரணம்.
ஷாங்காய் சோங் கீ எனும் அந்நிறுவனம் 268 ஊழியர்களுக்கும் ஒரு பகுதி சம்பளம் மட்டுமே வழங்கியிருந்தது. எஞ்சிய சம்பளத்தை தவணை முறையில் வழங்க ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது என்று நேற்று நாடாளுமன்றத்தில் மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.
துணை ஒப்பந்த நிறுவனமான ஷெங்டா கார்ப்பரேஷனின் பத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததால் அங் மோ கியோ ஸ்திரீட் 62ல் உள்ள 'என்சிஎஸ் ஹப்' வளாகத்தின் நுழைவு, வெளியேறும் வாயில்களை அடைத்துக்கொண்டு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த வளாகத்தின் வரவேற்புப் பகுதியை புதுப்பிக்கும் பணியை ஏற்று இருந்த ஷாங்காய் சோங் கீ, ஆறு வெளிநாட்டு ஊழியர்களை வழங்க ஷெங்டா கார்ப்பரேஷனை அமர்த்தியது.
மனிதவள அமைச்சின் முதற்கட்ட விசாரணையில் பத்தில் ஐந்து பேருக்கு ஷெங்டா கார்ப்பரேஷன் சம்பள பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் இன்னமும் காவல்துறை விசாரணையில் இருக்கிறது என்று திரு ஸாக்கி முகம்மது கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கப் படுமா என்று மவுண்ட்பேட்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் பியௌ சுவான் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்துப் பேசினார்.
"முதலாளி வேண்டுமென்றே சம்பள பாக்கியை வைக்கவில்லை. இந்தச் சவாலான காலகட்டத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கட்டுமானத் துறையில் சில வேளைகளில் சம்பளம் வழங்குவது தாமதமாகிறது," என்று அமைச்சர் ஸாக்கி எந்த நிறுவனத்தையும் குறிப்பிடாமல் தெரிவித்தார்.
"எனவே சமரசம் மூலம் சிறந்தவற்றை செய்ய முயற்சி செய்கிறோம். இந்த விவகாரத்தில் நெருக்கடியை ஏற்படுத்தினால் நிறுவனம் மூடப்பட்டு ஊழியர்களும் பாதிக்கப்படுவார்கள்," என்றார் அவர்.
மற்றொரு பதிலில் சம்பள பாக்கியை கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை அண்மைய ஆண்டு களாக குறைந்திருப்பதாவும் அமைச் சர் ஸாக்கி தெரிவித்தார்.
சச்சரவுகளுக்குத் தீர்வு காணும் முத்தரப்புக் குழு, 2022ல் மாதந்தோறும் 160 சம்பள பாக்கி கோரிக்கைகளை கவனித்து வருகிறது. இது, 2019ல் மாதம் 410ஆக இருந்தது.
இதற்கிடையே நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய மனிதவள துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங், உள்ளூர் ஊழியர்களுக்கு மத்திய சேம நிதி பங்களிப்பை வழங்கி வெளிநாட்டு ஊழியர் களுக்கான ஒதுக்கீடு காட்டப் படுவதாக 2015 முதல் 2021 வரை ஆண்டுக்கு 660 புகார்கள் வந்ததாகக் கூறினார்.
பாட்டாளிக் கட்சியின் அல்ஜுனிட் குழுத் தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரல்ட் கியாம் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
"இதே காலகட்டத்தில் ஆண்டுக்கு 11 முதலாளிகள் வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரம்பைக் கூட்டிக் காட்டுவதில் விதிமுறையை மீறியிருக்கின்றனர். அவர்களுக்கு நிர்வாகரீதியிலான அபராதம் விதிக்கப்பட்டது. வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தவும் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. "அபராதத்தின் மதிப்பு $1,250லிருந்து $200,000 வரையிலும் சராசரி அபராதம் $15,000ஆகவும் இருந்தது.
"எச்சரிக்கை விடுப்பது, விதிமீறல்களை சரிசெய்வது, வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தத் தடை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் முதலாளி களுக்கு எதிராக எடுக்கப்பட்டன," என்று அமைச்சர் கான் மேலும் தெரிவித்தார்.

