கார்டன்ஸ் பை தி பே எனும் கரையோரப் பூந்தோட்டங்களின் தெற்கையும் கிழக்கையும் இணைக்க ஒரு பாலம் கட்டப்படலாம் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார். பே ஈஸ்ட் கார்டன் எனப்படும் கரையோரக் கிழக்குப் பூந்தோட்டத்தை மேம் படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக பாலம் கட்டப்படக்கூடும்.
தற்போது, பே ஈஸ்ட் பகுதிக்கு மரினா அணைக்கட்டு வழியாகச் செல்லவேண்டும்.
சிங்கப்பூர் நிறுவனர்கள் நினைவகம் கட்டுப்படும் அதே நேரத்தில், கிழக்குத் தோட்டம் ஒரு நீர்முகப்புத் தோட்டமாக மாற்றப்பட்டு வருவதை திரு லீ சுட்டினார். கரையோரப் பூந்தோட்டங்களின் 10வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் நேற்று அவர் உரையாற்றினார்.
பாலத்தை வடிவமைப்பதற்கு ஒப்பந்தப் புள்ளிக்கான கோரிக்கை இவ்வாண்டு இறுதிக்குள் விடுக்கப்படும் என்று கரையோரப் பூந்தோட்டத்தின் தலைமை நிர்வாகி ஃபீலிக்ஸ் லோ தெரிவித்தார்.
2027ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்படும்போது கரையோர கிழக்குப் பூந்தோட்டம் துடிப்பான இடமாக அமையும். தெற்கு, கிழக்கு தோட்டங்களுக்கு இடையே பாலம் அமைப்பதன்வழி அக்கவர்ச்சித் தலங்களின் மதிப்பு உயரும் என்று அவர் கூறினார். பாலம் அமைப்பதற்கு சரியான இடம் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், கரையோரப் பூந்தோட்டங்களில் கரிம வெளியேற்றத்தை முற்றிலும் அகற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டாவது புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆலையை அமைப்பது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
பூந்தோட்டங்களில் கரிம வெளியேற்றத்தைப் படிப்படியாகக் குறைத்து முற்றிலும் நீக்குவதற்கான திட்டம் அடுத்த ஆண்டு தயாராகி விடும்.
இரண்டாவது ஆலையை வருகையாளர்களுக்குத் திறந்துவிடவும் நீடித்த நிலைத்தன்மை முக்கியத்துவம் பற்றி அவர்கள் கற்க வசதி ஏற்படுத்தவும் சாத்தியம் உள்ளது.
கரையோரப் பூந்தோட்டங்களின் தற்போதைய கட்டடங்களில் கூடுதல் சூரிய சக்தித் தகடுகள் பொருத்தப்பட்டு வருவதாகவும் திரு லோ குறிப்பிட்டார். சுமார் 2,300 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் ஓராண்டில் பயன்படுத்தும் எரிசக்தியை உற்பத்தி செய்யும் ஆற்றல் அத்தகடுகளுக்கு இருக்கலாம்.
மேலும், குறைந்த வருமானக் குடும்பங்கள் கரையோரப் பூந்தோட்டங்களை இலவசமாகக் காணவும் ஏற்பாடு செய்யப்படும் என்று திரு லீ தெரிவித்தார்.
அதற்காக, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு இலவசமாக ஓராண்டுக்கான பூந்தோட்ட நண்பர்கள் உறுப்பியம் வழங்கப்படும்.
தொடக்கக் கட்டமாக வரும் ஜனவரி மாதம், கிரேத்தா ஆயர், புக்கிட் மேரா வட்டாரங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு உறுப்பினர் அட்டை தரப்படும். அக்குடும்பங்கள் எவ்வளவு முறை வேண்டுமானாலும் ஃபிளவர் டோம் மலர் காப்பகத்துக்கு இலவசமாகச் செல்ல இது வகை செய்யும்.
அத்துடன், பசுமை இடங்கள் இருப்பதன் முக்கியத்துவத்தை கொவிட்-19 கிருமிப் பரவல் காட்டி யுள்ளதாக அமைச்சர் லீ கூறினார்.
கடந்த 2021ல் கரையோரப் பூந்தோட்டங்களுக்கு 8.3 மில்லியன் குடியிருப்பாளர்கள் சென்றனர். பூந்தோட்டங்களுக்கு உள்ளூர் மக்கள் சென்றது இதுவே ஆக அதிகம்.
அத்துடன், டிசம்பர் வாரயிறுதிகளில் உள்ளூர் குடியிருப்பாளர்களுக்காக, இலவச இயற்கை சுற்றுலாக்கள் கரையோரப் பூந்தோட்டங்களில் நடத்தப்படும். நீடித்த நிலைத்தன்மையைச் சமூகத்தில் ஊக்குவிப்பது இதன் நோக்கம்.

