செங்காங் குழுத்தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானுக்கு நெருக்கமான இரண்டு முக்கிய பாட்டாளிக் கட்சி உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.
திரு யுதிஷ்த்திரா நாதன், திருவாட்டி லோ பெயிங் இருவரும் தங்கள் விலகல் கடிதங்களைப் பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கிடம் அளித்துள்ளதாக நேற்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர்.
ஆனால் 2021 டிசம்பரிலிருந்து கட்சிப் பணிகளை நிறுத்திவிட்டதாக அதில் இருவரும் குறிப்பிட்டனர். கடந்த 11 மாதங்களாகப் பெயரளவில் மட்டுமே பாட்டாளிக் கட்சி உறுப்பினர்களாக இருந்துள்ளதாகவும் கட்சிக்குப் பெரிதும் பங்களிக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
திருவாட்டி கானின் நடத்தை குறித்து கடந்த 2021 டிசம்பரில் நாடாளுமன்ற உரிமைக் குழு நடத்திய விசாரணையில் திரு நாதனும் திருவாட்டி லோவும் சாட்சியம் அளித்தனர்.
பாலியல் வன்முறைக்கு ஆளானதாக பொய் கூறியதை திருவாட்டி கான் கடந்தாண்டு ஆகஸ்ட்டில் ஒப்புக்கொண்டார். 2021 நவம்பரில் அவர் பாட்டாளிக் கட்சியிலிருந்து விலகினார்.
அச்சம்பவத்தின் தொடர்பில் பாட்டாளிக் கட்சித் தலைவர்கள் அளித்த சாட்சியத்திலிருந்து திரு நாதன், திருவாட்டி லோ இருவரும் பல நேரங்களில் முரண்பட்டனர்.
பாட்டாளிக் கட்சி உறுப்பினராக 10 ஆண்டுகளாக இருந்த திருவாட்டி லோ, திருவாட்டி ரயீசா கானின் நிர்வாக உதவியாளராக பணியாற்றினார். அதற்கு முன் அவர், திரு பிரித்தம் சிங்கின் உதவியாளராகவும் இருந்துள்ளார்.
திரு நாதன், 2013ஆம் ஆண்டு பாட்டாளிக் கட்சியில் தொண்டூழியராகச் சேர்ந்தார். 2016ஆம் ஆண்டு கட்சியில் சேர்ந்த அவர், அதன் இளையர் பிரிவு மன்ற உறுப்பினராகவும் உயர்வுபெற்றார்.
கடந்த 11 மாதங்கள் தங்களுக்கு எளிதாக இருக்கவில்லை என்றும் மாற்றம் விரும்பும் கட்டத்தை அடைந்ததாகவும் இருவரும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர்.
தங்கள் விசுவாசம் கேள்விக்கு உள்ளாகாமல் சொந்தக் கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரமுள்ள சாதாரணரண குடிமக்களாக மீண்டும் ஆக விரும்புவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

