வாகன உரிமைச் சான்றிதழ் (சிஒஇ) கட்டணங்கள் நேற்று எல்லாப் பிரிவுகளிலும் அதிகரித்துள்ளன. பொதுப் பிரிவில் சிஒஇ கட்டணம் இதுவரை இல்லாத அளவுக்கு, $116,577 ஆக உயர்ந்தது.
பெரிய கார்கள், மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றுக்கான பிரிவுகளிலும் சிஒஇ கட்டணம் புதிய உச்சத்தைத் தொட்டது.
நேற்றைய குத்தகை, நவம்பர் முதல் ஜனவரி வரைக்கும் நடத்தப்பட்ட முதல் குத்தகையாகும். கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது இந்தக் காலாண்டில் 13.8 விழுக்காடு குறைவான வாகனங்கள் விற்பனைக்கு விடப்படும்.
பெரிய கார்கள், அதாவது 1,600 சிசிக்கும் மேற்பட்ட கார்களுக்கும் 110 கிலோவாட்டுக்கும் அதிகமான எரிசக்தியைப் பயன்படுத்தும் மின்கார்களுக்குமான பிரிவில், சிஒஇ கட்டணம், 4.9 விழுக்காடு அல்லது $115,388ஆக உயர்ந்தது. கடந்த ஏலக்குத்தகையில் அப்பிரிவுக் கட்டணம் $110,000 ஆக இருந்தது.
பெரிய கார்களுக்கான சிஒஇ கட்டணம் செப்டம்பரில் $113,000ஆக அப்போது முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்தது.
பொதுப் பிரிவு வாகனங்களுக்கான கட்டணம், $108,003லிருந்து, 7.9 விழுக்காடு உயர்ந்து, $116,577 ஆனது. இவ்வாண்டு ஜூலையில் அப்பிரிவுக் கட்டணம், $114,001 எனும் புதிய உச்சத்தைத் தொட்டிருந்தது.
மோட்டார் சைக்கிள்களுக்கான சிஒஇ கட்டணம், $13,189 ஆனது. முந்திய ஏலக்குத்தகையில் $12,801 ஆக இருந்த கட்டணத்தைவிட இது 3 விழுக்காடு உயர்வாகும்.
சிறிய கார்களுக்கான பிரிவில் சிஒஇ கட்டணம் $81,089லிருந்து 7.6 விழுக்காடு உயர்ந்து $87,235 ஆனது. சரக்கு வாகனப் பிரிவில் சிஒஇ கட்டணம் $70,201லிருந்து $76,302 ஆக அதிகரித்தது.

