மது போதையில் லாரியில் உறங்கிய ஓட்டுநருக்குச் சிறை

மது போதையில் லாரியில் உறங்கிய ஓட்டுநருக்குச் சிறை

2 mins read
ce2902ca-b8d6-45d7-a54d-297a0687d4c6
-

நகராமல் ஒரே இடத்தில் இருந்த வாகனத்திலிருந்து ஒலி எழுப்பப்படுவது குறித்து காவல்துறைக்கு அழைப்பு வந்தது. அதைத் தொடர்ந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் ஆடவர் ஒருவர் தூங்கிக்கொண்டு இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக சின்னதம்பி அருமோ எனும் அந்த 44 வயது ஆடவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

அதை எதிர்த்து சின்னதம்பி வழக்கு விசாரணை கோரினார். ஆனால், குற்றம் நிரூபணமானதைத் தொடர்ந்து, அவருக்கு ஐந்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், $6,000 அபராதமும் ஐந்து ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

சின்னதம்பிக்கு எதிராக குற்றம் மெய்ப்பிக்கப்பட்டதற்கான காரணங்களை மாவட்ட நீதிபதி ஷர்மிலா ஸ்ரீபதி ஷனாஸ் விளக்கினார்.

2020 பிப்ரவரி 4ஆம் தேதி, சின்னதம்பி தமது லாரியில் உறங்கிக்கொண்டிருந்ததைக் காவல்துறையினர் கண்டறிந்தனர். செங்காங்கில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே உள்ள துணைச் சாலையில் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அங்கு வசித்த குடியிருப்பாளர் ஒருவர், மது அருந்திய ஓட்டுநர் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்றனர்.

இரவு 9 மணியிலிருந்து 10 மணிக்குப் பிறகு வரை சுமார் 90 நிமிடங்களுக்கு லாரியிலிருந்து நீண்ட ஒலி (ஹார்ன்) மூன்று முறை எழுப்பப்பட்டது.

இரவு 11.25 மணியளவில் சின்னதம்பி தூங்கிக்கொண்டு இருந்ததைக் காவல்துறையினர் கண்டறிந்தனர். அந்த லாரியின் கதவு திறந்திருந்தது, இயந்திரம் அணைக்கப்பட்டிருந்தது, எச்சரிக்கை ஒளி எரிந்தது.

தூங்கிய நிலையில் இருந்த சின்னதம்பியிடமிருந்து மது வாடை வீசியதாகவும் அவரது பேச்சு தெளிவின்றி இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 2005ல் சின்னதம்பிக்கு எதிராக குற்றம் நிரூபணமானது. அப்போது அவருக்கு $2,500 அபராதமும் 15 மாதங்களுக்கு வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.