நோயாளி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டிலிருந்து 2020ல் விடுவிக்கப்பட்ட பொது மருத்துவர் வீ தியோங் பூ, 71, 'கோடின்' எனும் பொருளுக்கு அடிமையான நோயாளிகளுக்கு "சிகிச்சையளிக்க" அந்தப் பொருள் அடங்கிய இருமல் மருந்தைத் தந்தார்.
மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற விசாரணையின்போது இந்த விவகாரம் பற்றி தெரியவந்தது. அதில், டாக்டர் வீயின் இடைக்கால பணிநீக்கத்தை 20 மாதங்களிலிருந்து 30-36 மாதங்கள் வரை உயர்த்த நீதிபதிகளிடம் சிங்கப்பூர் மருத்துவ மன்றம் வலியுறுத்தியது.
இவ்வாண்டு முன்னதாக, டாக்டர் வீக்கு 20 மாதங்களுக்கு பணியிடைநீக்கம் செய்யப்பட ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
தொழில்முறை ரீதியாக முறைகேடு செய்ததன் தொடர்பில் டாக்டர் வீ, 20 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அளவுக்கு அதிகமாக இருமல் மருந்தையும் 'பென்ஸோடைஸிப்பின்' எனும் பொருளையும் நோயாளிகளுக்கு தந்ததாக 10 குற்றச்சாட்டுகளும் போதிய அளவு நோயாளிகளின் மருத்துவப் பதிவேடுகளை வைத்திருக்கத் தவறியதாக 10 குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும்.

