போட்டித்தன்மை அதிகரித்து வரும் உலகில், ஒத்துழைப்புடன் கூடி அணுக்கமான ஆசிய சமூக உறவுகளை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்று அதிபர் ஹலிமா யாக்கோப் ஆசியான் பல்கலைக்கழக தலைவர்களுக்கான தலைமைத்துவ திட்ட மாநாட்டின் நிறைவு விழாவில் நேற்று கூறியுள்ளார்.
அண்டை நாடுகளுடனான உறவு சிங்கப்பூருக்கு எப்போதும் ஒரு முக்கிய முன்னுரிமையாக உள்ளது. உயர்கல்வித் துறையில் ஒத்துழைப்பு மூலம் ஆசியான் சமூகத்தை மேம்படுத்துவது அத்தகைய ஒரு வழி. ஆசியான் பல்கலைக்கழகத் தலைவர்கள் 'பிளம்' திட்டத்தில் ஒன்றுகூடுவது அத்தகைய வாய்ப்பில் ஒன்று என்றார் அவர்.
ஆசியான் பல்கலைக்கழகத் தலைவர்களுக்கிடையே உறவுகளை மேம்படுத்தவும், நுண்ணறிவுகளைப் பரிமாறிக்கொள்ளவும், யோசனைகளை பகிரவும் இந்த திட்டம் (பிளம்) வழியமைக்கிறது.
தெமாசெக் அறக்கட்டளையும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. தென்கிழக்கு ஆசியாவின் 24 பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 50 பல்கலைக்கழகத் தலைவர்கள் மூன்று நாள் மாநாட்டில் பங்கேற்றனர். இத்திட்டத்தின் 10 ஆண்டு நிறைவு விருந்து நிகழ்ச்சி ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் நேற்று இடம்பெற்றது.

