இல்லப் பணிப்பெண்ணை துன்புறுத்திய குற்றச்சாட்டை எதிர்நோக்கும் மாது ஒருவர் விசாரணையின் போது அழத் தொடங்கியதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்த 43 வயது மாது கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களுக்கிடையே தமது 24 வயது மியன்மார் நாட்டை சேர்ந்த பணிப்பெண்ணை பலமுறை துன்புறுத்தினார் என்று கூறப்பட்டது.
பணிப்பெண்ணை மூச்சுத் திணறும் வகையில் கழுத்தை நெரித்து அடித்ததுடன், கொலை மிரட்டல்களையும் விடுத்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்தது.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு நேற்று தண்டனை விதிப்பதாக இருந்தது. ஆனால் விசாரணையின்போது அவர் அழத் தொடங்கியதால் நீதிபதி விசாரணையை நிறுத்தினார்.
குற்றஞ்சாட்டப்பட்டவரின் கணவர் அவரை சமாதானப்படுத்திய பின், 30 நிமிடங்கள் கழித்து விசாரணை தொடர்ந்தது. தீர்ப்பு நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மனஅழுத்தம், பதற்றம் போன்ற மனநல பிரச்சினைகள் இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
குற்றஞ்சாட்டப்பட்ட மாதின் சிறு வயது மகன் சாட்சியமளிப்பதால் குற்றஞ்சாட்டப்பட்ட மாதின் அடையாளமும் பணிப்பெண்ணின் அடையாளமும் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
செங்காங் வட்டாரத்தில் உள்ள குற்றஞ்சாட்டப்பட்ட மாதின் வீட்டில் பாதிக்கப்பட்ட பணிப்பெண் 2017 ஆண்டு மே மாதத்தில் வேலை செய்ய தொடங்கினார்.
இருவருக்கும் இடையே தொடக்கத்தில் நல்ல உறவுமுறை இருந்தது என்று விசாரணையில் தெரிய வந்தது.
ஆனால், அதே ஆண்டு ஜூன் மாதத்தில், மாதுவின் தாயார் இந்தியாவுக்குச் சென்ற பிறகு, மாது பணிப்பெண்ணிடம் மரியாதை குறைவாக நடந்துகொண்டார்.
குற்றஞ்சாட்டப்பட்ட மாது, பணிப்பெண்ணிடம் தனது தூய்மையற்ற துணிகளை சுத்தமான துணிகள் இருக்கும் அலமாரியில் வைக்கச் சொன்னார். இதை மறுத்த பணிப்பெண்ணை மாது மிரட்டினார். இதனிடையில், தூய்மையற்ற சட்டை ஒன்றை எடுத்து பணிப்பெண்ணின் முகத்தில் வீசினார். சட்டையிலிருந்த பொத்தான் அவர் முகத்தில் பட்டதால், பணிப்பெண்ணுக்கு வலி ஏற்பட்டது என்று விசாரணையில் தெரியவந்தது.
இதுபோல பல சம்பவங்கள் நடந்துள்ளன என்று விசாரணையில் தெரிய வந்தது.
ஒருமுறை பணிப்பெண்ணின் இரு கன்னங்களிலும் அறைந்து, அவரின் கழுத்தை நெரித்து அடுப்பின் அருகில் கொண்டு சென்று, கொலை செய்யப் போவதாக மிரட்டினார் மாது என்று விசாரணையில் அறியப்பட்டது.
பணிப்பெண் இந்த துன்புறுத்தலை மாதின் கணவரிடம் கூறியபோது, அவரின் மனைவி கொலை மிரட்டல்களை நகைச்சுவையாக கூறினார் என்பதையும் இது மீண்டும் நடக்காது என்றும் அதைப் பொருட்படுத்தாமல் கூறினார்.
2017ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி அன்று, மாது பணிப்பெண்ணிடம் உணவை மரியாதையற்ற முறையில் கொடுத்ததால், இருவருக்கும் வாய்ச்சண்டை மூண்டது. இதற்கு பின், தான் சாப்பிட்டத் தட்டை பணிப்பெண் கழுவும் போது, மாது அவரை அடிக்க ஆரம்பித்தார் என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்ட பணிப்பெண் பூசை அறைக்கு சென்று, கதவை பூட்டி, காவல் துறையை தொடர்பு கொண்டார்.
மாதுவும் அவரின் கணவரும் கதவைப் பலமாகத் தட்டினர். மாது வெளியிலிருந்து கத்துவதை தொலைபேசி மூலம் கேட்க முடிந்தது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
காவல் துறை வீட்டுக்கு வந்த பிறகு மட்டுமே, பணிப்பெண் கதவை திறந்தார். காவல் அதிகாரி பணிப்பெண்ணின் முதுகிலுள்ள காயங்களை கண்டறிந்தார்.
பாதிக்கப்பட்ட பணிப்பெண் அவருக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துக்கொண்டு, காவல் அதிகாரிகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

