சிங்கப்பூரில் சங்கங்களைப் பதிவு செய்வதற்கான சட்டத்தில் பரிந்துரைக்கப்படும் திருத்தங்கள் குறித்து உள்துறை அமைச்சு பொதுமக்களிடம் கருத்துத் திரட்டவுள்ளது.
விதிமுறைகள், பெயர், செயல்படும் இடம் ஆகியவற்றில் மாற்றம் செய்யக் கோரும் சங்கங்களின் விண்ணப்பங்களை சங்கங்கள் பதிவாளர் எந்த அடிப்படையில் நிராகரிப்பார் என்பதற்கான பட்டியலை வெளியிடுவதும் திருத்தங்களில் அடங்கும்.
புதிதாகப் பதிவு செய்ய விரும்பும் சங்கங்களின் விண்ணப்பங்களை மதிப்பிடுவது தொடர்பில் பதிவாளருக்கு ஏற்கெனவே இருக்கும் அதிகாரங்களை விரிவுபடுத்துவதும் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்களில் ஒன்று.
எடுத்துக்காட்டாக, இன, சமய அடிப்படையிலான சங்கங்கள், சிங்கப்பூரின் இன, சமய நல்லிணக்கத்தைக் கீழறுப்பவையாக இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்ய, பதிவாளர் புதிய சங்கத்தின் விதிமுறைகளில் மாற்றத்துக்கு உத்தரவிடலாம்.
சங்கங்கள் சட்டம் 1966ல், சட்டவிரோதமான, விரும்பத்தகாத சங்கங்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது இதன் நோக்கம் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.
பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துப் பொதுமக்கள் அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை கருத்துத் தெரிவிக்கலாம்.
சட்டவிரோதக் காரணங்களுக்காகவோ பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் நோக்கிலோ சங்கங்கள் விதிமுறைகளை மாற்ற விண்ணப்பிக்குமேயானால் அவற்றை நிராகரிக்க, இந்த சட்டத் திருத்தங்கள் உதவும். ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சங்கத்தின் பெயரைப் பிரதிபலிப்பதுபோல பெயரை மாற்றக் கோரும் சங்கங்களின் விண்ணப்பங்களை நிராகரிக்கவும் இது பொருந்தும்.
அரசாங்கத்துடனோ வேறு பொதுத் துறை அமைப்புடனோ தொடர்புடையதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் மாற்றங்களும் நிராகரிக்கப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது.

