ஜெர்மானியப் பிரதமர் ஓலாஃப் ஷொல்ஸ், வரும் திங்கட்கிழமை 14ஆம் தேதி சிங்கப்பூருக்கு வருகை மேற்கொள்வார்.
ஜெர்மானியப் பிரதமராக அவர், சிங்கப்பூருக்கு மேற்கொள்ளும் முதல் வருகை இதுவாகும்.
சென்ற 2021ஆம் ஆண்டு டிசம்பரில் திரு ஷொல்ஸ் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
சிங்கப்பூருக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான சிறந்த உறவை அவரது வருகை மறுஉறுதிப்படுத்துவதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியது.
திரு ஷொல்ஸுக்கு இஸ்தானாவில் அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கப்படும். அவர் அங்கு அதிபர் ஹலிமா யாக்கோப்பைச் சந்திப்பார்.
பின்னர் திரு ஷொல்ஸ் பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்திப்பார். இரு பிரதமர்களும் திங்கட்கிழமை பிற்பகலில் கூட்டாக செய்தியாளர் சந்திப்பை நடத்துவர். மேலும், பிரதமர் லீ, ஜெர்மானியப் பிரதமருக்கு அதிகாரபூர்வ இரவு விருந்து அளித்து உபசரிப்பார்.
ஜெர்மானிய வர்த்தகத்தின் 17வது ஆசிய பசிபிக் மாநாட்டில் திரு ஷொல்ஸ், துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் சேர்ந்து சிறப்புரை ஆற்றுவார் என்று சிங்கப்பூருக்கான ெஜர்மானியத் தூதரகம் தெரிவித்தது.
ஆசிய பசிபிக் வட்டாரத்தில் நடக்கும் முக்கியமான ஜெர்மானிய வர்த்தக, நட்புறவு நிகழ்ச்சியான அந்த மாநாடு, ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.
திரு ஷொல்ஸை கௌரவிக்கும் விதமாக அவரது பெயர் புதிய ஆர்க்கிட் மலருக்கு சூட்டப்படும்.


