இருமொழித் திறனில் தொடர்ந்து அக்கறை செலுத்துவது சிங்கப்பூருக்கு மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
"அரசாங்கம் இருமொழித் திறன் மேம்பாட்டைத் தொடர்ந்து ஆதரித்து வந்தாலும் இங்குள்ள வெவ்வேறு இனத்தவரிடையே அதன் வெற்றிக்கான அளவுகோல் வேறுபடுகிறது. சீனர்களையும் இந்தியர்களையும்விட மலாய் இனத்தவர்கள் ஆக அதிக இருமொழித் திறனாளர்களாக உள்ளனர்," என்று பேராசிரியர் எட்டி குவோ, இணைப் பேராசிரியர் லுவோ ஃபுடெங் இருவரும் கருத்துரைத்துள்ளனர். இருவரும் சிங்கப்பூர் சமூக, அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகின்றனர்.
கடந்த 60 ஆண்டுகளாக அரசாங்கம் இருமொழிக் கல்விக் கொள்கையை அமல்படுத்தினாலும் தாய்மொழிகளின் தர மேம்பாட்டுக்கு இன்னும் இடம் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
"சீனர்கள், மாண்டரின் மொழிப் பயன்பாடு குறித்து மாறுபட்ட கருத்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன். மூத்த தலைமுறையினர் தாய்மொழிப் பயன்பாட்டை ஆதரித்தாலும் மற்றவர்கள் ஆங்கிலத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர்," என்றார் பேராசிரியர் குவோ.
"பரவலாக தமிழ் குறைவாகவே புழக்கத்தில் உள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த புதிய குடியேறிகள் வெவ்வேறு மொழிகளைப் பயன்படுத்துகின்றனர்," என்று கூறிய அவர், "ஆனால் மலாய்க்காரர்களைப் பொறுத்தவரை சமய நம்பிக்கை, கலாசாரம் ஆகியவற்றின் ரீதியாக ஒன்றுபட்டிருப்பதால் சமுதாயத்தில் தாய்மொழியை நிலைநிறுத்துவது அவர்களுக்கு எளிதாக இருக்கிறது," எனக் குறிப்பிட்டார்.
படித்தவர்களிடையே தாய்மொழியும் ஆங்கிலமும் தெரிந்தவர்கள் என்று கணக்கிட்டால் சீனர்களிடையே இந்த எண்ணிக்கை 62.3 விழுக்காடு. படித்த இந்தியர்களில் 41.8 விழுக்காட்டினருக்குத் தமிழும் ஆங்கிலமும் தெரியும். ஆனால் மலாய்க்காரர்களிடையே இந்த எண்ணிக்கை 82.8 விழுக்காடு.
"மொழித் திறனை எடுத்துக்கொண்டால், பேச்சு மொழித் திறனும் எழுதக்கூடிய திறனும் மாறுபட்டவை. சீனர்களில் பலருக்கு மாண்டரின் மொழியில் பேசத் தெரிந்தாலும் எழுத்து மொழியை அவர்கள் மேம்படுத்திக்கொள்ள இடமிருக்கிறது," என்றார் இணைப் பேராசிரியர் லுவோ.
இருமொழித் திறன் மேம்பாட்டில் சிங்கப்பூரர்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட இவ்விரு கல்விமான்களும் மூன்றாம், நான்காம் தலைமுறை அரசியல் தலைவர்களிடையே இருமொழித் திறன் கொண்டோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது சிறப்பான அம்சம் என்று குறிப்பிட்டனர்.
சீன மொழியில் இவ்விருவரும் இணைந்து, 'வேற்றுமையில் ஒற்றுமை: சிங்கப்பூரில் மொழியும் சமூகமும்' என்ற தலைப்பிலான நூலை எழுதியுள்ளனர். சென்ற ஜூலை மாதம் 276 பக்கங்கள் கொண்ட இந்நூல் வெளியானது.
பல இன, பல கலாசார மக்கள் வாழும் சிங்கப்பூரில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் திறன் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறிய பேராசிரியர் குவோவும் இணைப் பேராசிரிய லுவோவும் பன்மொழித் திறன் என்பது போட்டித்தன்மை மிக்க உலகில் வெற்றிபெறத் துணைசெய்யும் என்றார்.

