தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் மூன்றாம் கட்டத்தில் நேற்று 11 புதிய நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிலையங்களுக்கு இடையில் நேற்றுக் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இலவசப் பயணம் அனுமதிக்கப்பட்டது. ஸ்டீவன்ஸ் எம்ஆர்டி நிலையத்துக்கும் கார்டன்ஸ் பை த பே எம்ஆர்டி நிலையத்துக்கும் இடையில் முன்னோட்ட சுற்றுச் சேவை நேற்று நடைபெற்றது.
அதிகாரத்துவ ரயில் சேவை நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கும். மூன்றாம் கட்டத்தின் ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டதும் பயண முறைகளில் மாற்றங்களைக் கண்காணிக்கப்போவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கடந்த புதன்கிழமை கூறியிருந்தது.
குறிப்பாக, ரயில் பாதையையொட்டி இயங்கும் பேருந்து சேவைகள் மீதும் கவனம் செலுத்தப்படும் என்று அது தெரிவித்து இருந்தது. தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைக்கு இணையாக இயங்கும் பேருந்து சேவைகள் வேறு வழிக்கு மாற்றப்படும் அல்லது அவை அந்தச் சேவையிலிருந்து குறைக்கப்படும் என்று ஆணையம் குறிப்பிட்டு இருந்தது.
இப்போது இந்த ரயில் பாதைக்கு இணையான வழித்தடங்களில் பேருந்து சேவை எண் 162, 167, 75 போன்றவை இயங்குகின்றன.
இதேபோன்று பேருந்து சேவை மாற்றிவிடப்பட்டதும் குறைக்கப்பட்டதும் இதற்கு முன்னர் புதிய ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டபோது நிகழ்ந்திருக்கின்றன.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் மொத்தம் 32 நிலையங் களும் எட்டுச் சந்திப்பு நிலையங் களும் அமைகின்றன. இவை முழுமையாக 2024ஆம் ஆண்டு சேவைக்கு வரும் என்று இதற்கு முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.
ஆயினும், கட்டுமான தாமதம் காரணமாக இது தள்ளிப் போடப் பட்டுள்ளது.
புதிய ரயில் நிலையங்கள் திறப்பு விழாவில் பேசிய போக்கு வரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், 2030 ஆம் ஆண்டுவாக்கில் 360 கி.மீ. தூரத்திற்கு ரயில் கட்டமைப்பு இயங்கும் என்றார்.
தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை ரயில்கள் தொடக்க கட்டமாக தினமும் 500,000 பயணிகளுக்கும் நீண்டகாலப்போக்கில் 1 மில்லியன் பேருக்கும் சேவையாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

