நாடு எதிர்நோக்கும் சவால்களை முறியடிக்கவும் அதிலிருந்து மீண்டு வரவும் நம் நாட்டிற்கு முழுமைத் தற்காப்பு மிக அவசியம். முழுமைத் தற்காப்பின் ஆறு தூண்களாக ராணுவம், சமூகம், குடிமை, உளவியல், பொருளியல், மின்னிலக்க தற்காப்பு போன்றவற்றை பல ஆண்டுகளாக வளர்ச்சியடைந்து வந்துள்ளன என்று தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் குறிப்பிட்டார்.
"கொவிட்-19 தொற்றை வெற்றி கரமாக கடந்து வந்துள்ள நம் நாட்டுக்கு, சமூக, குடிமை தற்காப்பு பெரிய பங்காற்றியது. அதுபோல அடிப்படைத் தேவைப் பொருள்
களுக்கான உற்பத்தி சீர்குலைந்தபோது, வரத்தக, தொழில் அமைச்சும் பொருளியல் வளர்ச்சிக் கழகமும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து விநியோகத் தொடரை பலப்படுத்தியது, நம் பொருளியல் தற்காப்பின் முக்கிய பங்காக இருந்தது," என்றார் அவர்.
"இதுபோன்ற நிச்சயமற்ற சூழலில், சிங்கப்பூரர்கள் நிதானமாக இருந்து, கட்டுப்பாடுகளுக்கேற்ப தங்களின் அன்றாட வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டது நம் நாட்டின் உளவியல் தற்காப்பை பிரதிபலிக்கிறது. இந்த ஆறு தற்காப்புத் தூண்களும் ஒன்றிணைந்து சிங்கப்பூரின் நிலைத்தன்மைக்கும் அமைதிக்கும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
முழுமை தற்காப்பு விருது விழா 2022 நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாலை ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அமைச்சர் இங் உரையாற்றினார். தற்காப்பு மூத்த துணை அமைச்சர் திரு ஹெங் சீ ஹாவ், தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டனர்.
வர்த்தகங்கள், நிறுவனங்கள், தனிநபர்கள், நாட்டின் தேசிய சேவைக்கும் முழுமைத் தற்காப்புக்கும் ஆதரவளித்ததை அங்கீகரிக்கும் நோக்கில் இந்த விருது விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இவ்வாண்டு, சிறிய, நடுத்தரத் தொழில்கள், பெரிய நிறுவனங்கள், நிறுவனங்கள், ஆகியவற்றை சேர்ந் தவர்களுக்கும், தனிநபர்களுக்கும் மொத்தம் 170 விருதுகள் வழங்கப்பட்டன.
சிறிய, நடுத்தரத் தொழில்கள் பிரிவில், ஆக உயர்ந்த தேசிய சேவை ஆதரவாளருக்கான 'த என்எஸ் அட்வகேட் அவார்ட்' விருதை திரு அரவிந்த் சந்திரசேகரன் பெற்றுக்கொண்டார்,
செக்குருஸ் என்னும் நிறுவனத் தின் நிர்வாக இயக்குநரான இவர், நாட்டின் முழுமைத் தற்காப்புக்கும் தேசிய சேவைக்கும் தம் நிறுவனம் எவ்வாறு ஆதரவு அளித்து வருகிறது என்பதைப் பகிர்ந்துகொண்டார். நிறுவனத்தில் பணிபுரியும் தேசிய சேவையாளர்கள், முகாம் பயிற்சிக்குச் செல்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, அவர்கள் இல்லாத நேரத்தில் வேறொரு பணியாளரை அமர்த்துவதற்கான ஏற்பாடுகளை நிறுவன மனிதவளப் பிரிவு செய்துவிடும் என்றார் இவர்.