நீதிமன்றத்தை அவமதித்ததாக
மாதுமீது குற்றச்சாட்டு
சிங்கப்பூரில் பணியாற்றி வந்த பிரிட்டிஷ் ஆடவரான பெஞ்சமின் கிளைன் என்பவர் முகக்கவசம் அணியாதது உள்ளிட்ட குற்றங்களுக் காகக் கடந்த ஆண்டு தண்டிக்கப்பட்டு அவரது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். இவ்வழக்கு தொடர்பான விசாரணை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் நடைபெற்ற போது லீ ஹுய் யின் (படம்) என்னும் மாது, முகக்கவசத்தைச் சரிவர அணியவில்லை. அதனைச் சரிசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் அவர் உரக்கக் கத்தினார். அவர் நீதிபதி எடி தாம் முன்னிலையில் நீதிமன்றத்தை அவமதித்து, அவதூறாக பேசியதாக நேற்று குற்றம் சாட்டப்பட்டது. அரசாங்க ஊழியரை இழிவுபடுத்தும் வகையில் அவமதிக்கும் குற்றத்திற்கு $5,000 வரை அபராதம், ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
$9.8 மி. லஞ்சம், மோசடி: கட்டுமான மேலாளர்மீது குற்றச்சாட்டு
கிட்டத்தட்ட $9.8 மில்லியன் தொகை தொடர்பில் லஞ்சம் மற்றும் மோசடி குற்றங்களுக்கு, கட்டுமான மேலாளர் ஒருவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. லஞ்சம், பணமோசடி, மற்றொரு நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட $8 மில்லியன் கொடுக்க தனது முதலாளியை ஏமாற்றியது போன்ற குற்றச் சாட்டுகள் மோடெக் ஆஃப்ஷோர் என்னும் நிறுவனத்தின் கட்டுமான மேலாளரான 59 வயதான ஹரிஷ் சிங்கால் மீது சுமத்தப்பட்டன. ஹரிஷும் இதில் சம்மந்தப்பட்ட நால்வரும் 2011, 2016 ஆண்டுகளுக்கு இடையில், நெப்டியூன் ஷிப் மேனேஜ்மென்ட் இயக்குநர் கோட்டாக்கி ஸ்ரீனிவாஸ் பட்நாயக்கிடமிருந்து US$942,000 லஞ்சம் பெற்றனர் என்று கூறப்படுகிறது. இந்த லஞ்சம் நெப்டியூன் நிறுவனத்துக்கு வர்த்தக சலுகை வழங்க வெகுமதியாக கொடுக்கப்பட்டது. இது தவிர, US$313,000 பெறுமான சலுகைகளையும் மோசடி மூலம் பெற ஹரிஷ், கோட்டாக்கி, இதர மூவரும் சேர்ந்து, வரவு செலவு நடைபெற்றதைப்போல போலி அறிக்கைகளைத் தயார் செய்தும் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

